முகப்பு தொடக்கம்

"ஞானசத்திதரனென்னச் சாற்று நாமம் பொருண் மிகுத்த பல பெயரின் மிக்க பெயராயங்குப் பொலிந்தமையும் ஈங்குள்ள குமாரதீர்த்தம் ஏனைய தீர்த்தங்களினும் காட்டில் மிகச் சிறந்ததீர்த்தமாகும்" என்பது பேசப்படுகின்றன. இத்தீர்த்தத்தின் சிறப்பினைக் கச்சியப்பர்,

"எத்தினத்தா யினுமொருகான் முழுகினர் எப்
     பிணியுமெழு காத மோப்பிப்
 புத்தியறி வாயுள்சுசி புகழ்சூழ்ச்சி
     வீரம்வலி பொருண்மேம் பாடு
 மித்திரர்புத் திரர்மனைவி முதலான
     வெறுக்கையெலா மேவி யீற்றில்
 கொத்தினொடுங் கந்தலோ கத்தைஅவன்
     உருக்கொண்டு குறுகி வாழ்வார்"

(44)

என்று இனிதினோதுகின்றனர். இனி இதனை அடுத்துக் கூறுகின்ற முருகப்பெருமான் பெருமை ஆற்றவினியது - கடலினும் ஆழ்ந்த கருத்துடையது - சைவசமயத்தின் சாறு போல்வது - ஓதுகின்றவர் உள்ளத்தில் பேணி வைத்துக் கொள்ள வேண்டிய பீடுடையது.

அவ்வினிய செய்யுள் இதோ வருகின்றது -

"செங்கமல மலரேய்க்கு மொருதிருக்கை
     குறங்கமைத்துச் செம்பொன் மேருத்
 துங்கவரிச் சிலைக்கடவுள் அருள்ஞான
     சத்தியொரு தொடிக்கை யேந்திப்
 பொங்குமருட் கருணைவிழிக் கடையொழுக
     மலர்ந்தமுகப் பொலிவி னோடும்
 அங்கணமர் ஞானசத்தி தரனையகத்
     துறநினைப்போ ரவனே யாவர்."

(45)

என்பதாம்.

(6) பிரமன் சிருட்டிபெறு படலம்

இப்படலத்தில் செருக்குடைமையாலே தன் பெருமையிழந்து சிறையும் புகுந்த நான்முகன் தான் இழந்துவிட்ட படைப்பாற்றலை மீண்டும் எய்தக்கருதிக் குற்றால வனத்திருந்து தவஞ்செய்தலும் பின்னர்த் திருவூர் சிலவற்றிற் சென்று வழிபாடு செய்தலும் திருத் தணிகையிற் சென்று ஞானசத்திதரனை வணங்கி அவனருளாலே மீண்டும் தனக்குரிய படைப்பாற்றலைப் பெற்றுய்தலும் பிறவும் கூறப்படுகின்றன.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்