நினைவைவிட்டகலாத பேரழகினையுடைய நீர்வீழ்ச்சியினை யுடைய திருக்குற்றாலம் கச்சியப்ப முனிவருடைய திருவுள்ளத்தைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்று கூறவும் வேண்டுமோ ? அந்த அழகிய குற்றாலக் காட்சியே இந்தப் படலத்தில் செய்யுள்களாக உருக்கொண்டுள்ளன. குற்றால மலையின்கண் வேர்ப்பலாக்கனிகள் நிலத்தினூடேயே, நிலம் பிளப்பப் பருத்துக் கனிந்து கிடத்தலால் அவற்றின் நறுமணம் யாண்டும் பரவிக் கமழ்கின்றது. இந் நறுமணத்தை நுகர்ந்து இங்ஙனம் மணக்கும் பலாக்கனி எங்குளது என்று இம்முனிவர் தேடியுமிருப்பர். மணத்தின் வழிச் சென்று தேடி அவைவேரிற் பழுத்த கனிகளாதல் கண்டு வியந்து நின்றன ராதலும் கூடும். அப்பொழுதே அதற்கோருவமையை இவர் புலமையுள்ளம் தனக்குள்ளேயே தேடிக் கண்டு கொள்கிறது. அதனைச் செய்யுளாக வடிக்கின்றது இவருடைய செந்நா. இதோ அச்செய்யுள் வருகின்றது :
| "கரந்து வைகினும் கற்றவர் தம்புகழ் | | நிரந்து தோற்றப் படுவது நேர்மணுள் | | பரந்த வேர்ப்பல வின்பழம் யாவர்க்கும் | | சுரந்த வாசத்திற் றோற்றுமொர் பாலெலாம்." | வாய்மையாகவே புகழ்மகளைப் பெறவேண்டும் என்று பெரிதும் விரும்பித் தேடுவார் கண்ணில் அத்தெய்வமகள் புலப்படுவதே யில்லை; கரந்து மறைந்து விடுகின்றாள். மற்று அப்புகழ் மகளோ தன்னை எய்துதற்குரிய தகுதியுடையாரைக் காண்டற்கு யாண்டுந் தேடி வருகிறாள். அத் தகுதியுடையாரோ தம்மைத் தாமே கரந்து வைக்கின்றனர். முடிவில் புகழ்மகள் அவரைக் கண்டு பிடித்து அவர் புகழ் உலகெலாம் காலமெலாம் கமழச் செய்து விடுகின்றாள். இத்தகைய புகழாளர் புகழே என்றும் நின்று நிலவும் மெய்ப் புகழாகும். தாமே தம்மைப் புகழ்வித்துக் கொள்ளும் புகழ் வெறும் போலி என்று முனிவர் இச்செய்யுளால் உணர்த்துகின்றனர். இன்னும் இக்குற்றாலக் காட்டிலே, இவர் நம்மனோர்க்குக் காட்டும் காட்சிகளும் அவற்றைத் தலைக்கீடாகக் கொண்டு அவர் அறிவுறுத்தும் நல்லறங்களும் பெரிதும் நலமுடையனவாகும். ஓரிடத்தே வளமிக்க செங்காந்தள்கள் மலர்ந்து செறிந்துள்ளன. அம்மலரினூடே வண்டுகள் வந்து தேன் பருகுதற்கு நுழைகின்றன. அயலிலே குரங்குகள் பல களித்தாடுகின்றன. இந்தக் காட்சியைக் கண்டுகளித்த முனிவர் தற்குறிப்பேற்றமாக அக் காட்சியினின்றும் அறம் ஒன்றனை நமக்கு அறிவுறுத்துகின்றனர். அச்செய்யுள் வருமாறு : |