முகப்பு தொடக்கம்
"வண்டு போய்மலர்க் காந்தளின் மூசுதல்
 கண்டழற்குட் கவிழ்ந்தன வென்றுநீர்
 நொண்டு நுண்டுளி தூஉய்ப்பெயர்த் தோகையுட்
 கொண்டு மந்தி குனிக்குமொர் பாலெலாம்"

(13)

எனவரும் இச்செய்யுளில் கூறப்படுகின்ற அக்குற்றாலக் காட்டுக் குரங்குகள் காந்தள்மலர்களைத் தீப்பிழம்புகளாகவே கருதியிருந்தன. அம்மலரினூடு புகும் வண்டுகள் தீயின்கண் வீழ்ந்து விட்டன என்று அக் குரங்குகள் பெரிதும் இரக்கமுற்று அயலிலுள்ள சுனைநீரைக் கையான் முகந்து அத்தீயை அவிக்கலாயின. அங்கிருந்த வண்டுகள் அலமந்தெழுந்தோடுதலைப் பார்த்து அவை யிற்றை யாம் இற்றைநாள் பிழைப்பித்து அறமுடையேம் ஆயினேம் என்னும் களிப்பினாலேதான் இக்குரங்குகள் கூத்தாடுகின்றனவாம். இங்ஙனம் கூறுகின்றனர் இப்புலவர் பெருமான். நமது மூதாதையராகிய இக்குற்றாலக் குரங்கின் அருளுடைமை நம் மக்கள்பால் பெருகவேண்டும் என்பதே இச்சான்றோர் கருத்தாகும்.

இப் படலத்தில் நான்முகன் அறுமுகனை வழிபாடு செய்து வாழ்த்திப் பாடுகின்ற வாழ்த்துப் பாடல்கள் ஓசையின்பமும் சொல்லழகும் பொருளாழமும் பெரிதும் உடையன; ஓத ஓத இனிக்கும் பண்புடையன.

கம்பராமாயணத்தில் உயுத்த காண்டத்தின்கண் நாகபாசப் படலத்தில் கருடனுடைய கூற்றாகவருகின்ற திருமால் வாழ்த்தினை முழுவதும் பின்பற்றியே முனிவர் ஈங்கு இச்செய்யுளை ஓதுகின்றனர் என்பதிற் சிறிதும் ஐயம் இல்லை. கம்பராமாயணத்தில் மேற்கூறப்பட்ட பகுதி கற்றோர் உள்ளத்தைக் கனிந்துருகச் செய்யும் ஆற்றலுடையதாகும். சுருங்கக் கூறின் கம்பர்கூட முற்பகுதிகளைப் பாடிப்பாடிப் பெற்றிருந்த பயிற்சித் திறத்தாலே இங்ஙனம் பாடவல்லவர் ஆயினர் என்றும் நினைக்கச் செய்கின்றன அச்செய்யுள்கள். இங்கும் எவ்வாற்றானும் கச்சியப்ப முனிவர் இயற்றுஞ் செய்யுள்களும் ஏறத்தாழ அச்செய்யுள்களின் தரத்தையே எட்டி விடுகின்றன என்னலாம். ஈண்டுப் பிரமனுடைய கூற்றில் வைத்துக் கச்சியப்ப முனிவர் முருகப் பெருமானுடைய முழுமுதற் றன்மையை இச் செய்யுள்களால் விளக்குகின்றனர். இச்செய்யுள்கள் முடிவுறுங்கால் முனிவரே இவ்வுண்மையை "வேத மத்தகம் அளைந்துகிடந்த விழுப்பெருந்துதி" எனக் கூறுவது முழுவதும் பொருந்தும். இனி இப் படலத்தில் வருகின்ற "தென்றல் சந்தனம் செந்தமிழென்றிவை நன்றளிப்ப நறும் பொதியம்" (21) என்னும் சொற்றொடர் தமிழின்ப நுகர்வோ ருளத்தைப் பெரிதும் குளிர்விப்பதுணர்க.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்