முகப்பு தொடக்கம்

கடலும் நிலைகண்டுணர்ந்தவருமாகிய மாதவச் சிவஞான யோகியாரிடம் கச்சியப்ப முனிவர் தொல்காப்பியமே முதலிய தமிழிலக்கணங்களையும் பாணினீய முதலிய வடமொழி இலக்கணங்களையும், இருமொழியினுமுள்ள இலக்கியங்களையும் இனிது பயின்று அச் சிவஞான முனிவரே போன்று கல்வித் துறையிற் பெரிதும் சிறப்புற்றுத் திகழ்வாராயினர். இவ் வாற்றால் சிவஞான முனிவருக்கும் கச்சியப்ப முனிவருக்கும் ஞானாசிரியர் பின்வேலப்ப தேசிகர் என்னும் நமச்சிவாயமூர்த்திகளேயாவார் என்றும் சிவஞான முனிவர் கச்சியப்ப முனிவர்க்கு வடமொழி தென்மொழி யிரண்டனையும் பயிற்றுவித்த நல்லாசிரிய ராவார் என்றும் தெரிகின்றது. துறைசையாதீனம் என்னும் திருவாவடுதுறைத் திருமடத்திலே பெரிய பட்டம் என்கின்ற பெருந்தலைமை பூண்போரை நமச்சிவாய மூர்த்திகள் என்றே குறிப்பிடுதலும் சின்னப்பட்டம் என்கின்ற துணைத்தலைமை பூண்போரை அம்பலவாணர் என்றே குறிப்பிடுதலும் வழக்கமாகும். இக் காரணத்தால் மாதவச் சிவஞான யோகியார்க்கு இவர்தம் நூலில் வணக்கம் கூறாமல் ஞானாசிரியராகிய நமச்சிவாய மூர்த்திகளுக்கே வணக்கம் கூறுவாராயினர். அது வருமாறு :-

"அருள்வளர் நந்தி மேதகை விளக்கி
     யருள்சிவ ஞான போதத்தைத்
 தெருள்வளர் தமிழ்ச்செய் தளித்த மெய்கண்ட
     தேவனற் சந்ததி விளங்க
 வருமொரு துறைசைத் திருநகர் நமச்சி
     வாயதே சிகனொடு மிந்தக்
 குருபரன் வழிவந் தருணனி கொழிக்குங்
     குரவர்கள் பலரையுந் துதிப்பாம்"

என்பது, கச்சியப்ப முனிவர் தணிகைப் புராணத்தில் கூறுகின்ற ஆசிரியர்
வணக்கமாகும்.

இனி, இதன்கண் "இந்தக் குருபரன் வழிவந் தருணனி கொழிக்கும் குரவர்கள் பலரையும் துதிப்பாம் என்பதனால் இப்புலவர் பெருமான் தம் புலமைக்குப் பேராசிரியரா யமைந்த சிவஞான முனிவர்க்கும் வணக்கம் கூறியவராதல் நுண்ணுணர்வினாற் கண்டுகொள்க.

இனி, சிவஞான முனிவர் தாமும் தமது காஞ்சிப் புராணத்திலே வேலப்ப தேசிகன்றாள் சென்னி சேர்ப்பாம் என வணங்குவதும் ஈண்டுக் கச்சியப்ப முனிவர் நமச்சிவாய தேசிகன் என்று குறிப்பிடுவதும் ஒரு ஞானாசிரியரையே என்றுணர்க. -

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்