நூலாசிரியர் வரலாறு
செந்தமிழ்ப் புராணங்களுள் சிறந்து விளங்கும் இத் தணிகைப் புராணத்தை இயற்றிய புலவர் பெருமான் கச்சியப்ப முனிவராவார். வினையினீங்கி விளங்கிய மெய்யறிவினையுடைய இவர் தொண்டை மண்டலத்திலுள்ள திருத்தணிகையிலே தோன்றியவராவார். இவர் பிறந்த குடியைக் காஞ்சிச் சைவ வேளாளர் பெருங்குடி என்று வழங்குவர் என்று அறியப்படுவதனால், இவர் முன்னோர் காஞ்சியினின்றும் திருத்தணிகையில் குடியேறியவர் என்றறிகின்றோம். இந்நூலாசிரியர் கருவிலேயே மெய்யுணர்வுத் திருவுடையராய்ப் பிறந்தவர் ஆவர். ஆதலால் இவர் இளமையிலேயே இவ்வுலகியல் வாழ்விலே நாட்டமிலராய்த் துறவு மனப்பான்மை யுடையராய்த் திகழ்ந்தார். மிக்க இளமைப் பருவத்திலேயே தென்மொழி வடமொழி யிரண்டனையுமே நன்கு பயின்று இரு மொழியினும் வல்லுநராய்த் திகழ்ந்தனர். கல்வியறிவு முதிர்ந்தபின்னர் மெய்யுணர்வு பெறுதற்குரிய நல்லாசிரியரைக் காணவிழைந்து திருக்கோயில் யாத்திரை தொடங்கினர். | "மூர்த்திதலம் தீர்த்தம் முறையாய்த் தொடங்கினர்க்கோர் | | வார்த்தை சொலச் சற்குருவும் வாய்க்கும் பராபரமே" |
என்பது தாயுமானவர் திருமொழியாகும். இத் திருமொழிக் கிணங்கவே கச்சியப்ப முனிவர் அந்த யாத்திரையிலே தில்லை முதலிய திருவூர் பலவற்றையும் கண்டு வழிபாடு செய்து திருவருள் கூட்டுவித்தலாலே திருவாவடுதுறையை எய்தி அங்குள்ள சித்தாந்த சைவத் திருமடத்தின்கண் தலைமை பூண்டிருந்த பின் வேலப்ப தேசிகர் என்னும் நமச்சிவாய மூர்த்தியைக் கண்டு வணங்கி அப் பெரியாருடைய திருவரு ணோக்கமும் கைவரப் பெற்றனர். பின்னர், அத் திருவாவடுதுறைத் திருமடத்துத் துணைத் தலைமை பூண்டிருந்த அம்பலவாண தேசிகரிடத்துச் சைவ சித்தாந்த நூல்களைப் பயின்று மெய்யுணர்வு பெருகப் பெற்றனர். அம்பலவாண தேசிகரிடத்தே தீக்கையும் பெற்று மாபெருஞ் சைவத் துறவியாகித் திகழ்ந்தனர். பின்னரும் பின் வேலப்ப தேசிகராகிய நமச்சிவாய தேசிகரிடத்திலே ஞான தீக்கை பெற்றவரும் தென்மொழிக் கடலும் வடமொழிக் |