உரை வரலாறு தணிகைப் புராணம்என்னும் இத் தண்டமிழ்ப் பேரிலக்கியம் தென்னிந்திய சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்தாரால் முதன் முதலாகச் சிறந்த உரையுடன் இப்பொழுது வெளியிடப்படுகின்றது. பழைய தமிழிலக்கியச் செல்வம் அழிந்து போகாதபடி காலஞ் சென்ற டாக்டர் மகாமகோபாத்தியாய உ. வே. சாமிநாதையர் அவர்களை உள்ளிட்ட பல சான்றோர்கள் பெரிதும் முயன்று நாடெலாஞ் சென்று வீடுவீடாக நுழைந்து தேடிக் கண்டுபிடித்துப் பேணி வைத்தனர். அப்பழம் பெருஞ் செல்வங்களை இக்காலத்திற் கியன்ற முறையில் பழைய உரைகளைப் புதுக்கியும் உரையில்லாத வற்றிற்கு இக்காலத்தில் உரையெழுதும் ஆற்றல்வாய்ந்த புலவர் பெருமக்களைக் கொண்டு உரையெழுதுவித்தும் அழகுக்கு அழகு செய்து கண்டோர் கண்கவர் வனப்புடன் நூல்வடிவிலே வெளியிட்டுச் செந்தமிழ்மொழிக்கு ஒப்பற்ற பெருந்தொண்டு செய்து வருகின்றது மேற்கூறப்பட்ட சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகம். மேலும் அப்பழம் பேரிலக்கியங்களைச் சங்க நூல்கள் என்றும் காப்பியங்கள் என்றும் இனம் இனமாக முழுவதும் ஒரு சேரத் தொகுத்து அவற்றிற்கு வெளியீட்டு விழாக்களும் எடுத்துத் தெருவெல்லாம் பண்டைத் தமிழ் மணம் கமழும்படியும் செய்து வருகின்றது அந்த மாண்புமிக்க கழகம். இக்கழகத்தின் இத்திருத்தொண்டினை இப்பொழுது இத்தமிழகம் நன்கறிந்து அத் தொண்டாலியன்ற பயனைப் பெற்று நுகர்ந்தும் வருகின்றது. தமிழ்ப் பேரிலக்கியங்களை மேலே கூறியபடி பேணி வருவதனையே குறிக்கோளாகக் கொண்ட அக்கழகத்தாராற் பேணத் தகுந்த சிறப்பு வாய்ந்த இலக்கியங்களுள் இத்தணிகைப் புராணமும் ஒன்றாகும். இந்தநூல் புராணம் என்னும் பெயருடைய தாயினும் இஃது ஏனைய கோயிற் புராணங்கள் போலாது கம்ப ராமாயணம் போன்றதொரு சிறந்த பெருங்காப்பியமேயாகும். இத்தணிகைப் புராணத்தை மூல நூலாக முதன் முதல் யாழ்ப் பாணத்துப் பேரறிஞர் சி. வை. தாமோதரம் பிள்ளையவர்கள் தமக்குச் சைவ சமயத்தின்பாலும் தமிழின்பாலும் உண்டான பேரார்வம் காரணமாகக் கி. பி. 1883 ஆம் ஆண்டிலே அச்சிட்டு வெளிப்படுத்தினார்கள். பின்னர் அஃதாவது - கி. பி, 1929 ஆம் ஆண்டில், சென்னை, கா. நமச்சிவாய முதலியாரவர்கள் மூல நூலாகவே அச்சிட்டு வழங்கினார்கள். அந்நூல் இறுதியில் இத் தணிகைப் புராணத்திற்குச் சிதம்பரம் ஈசானியமடம். இராமலிங்க சுவாமிகள் எழுதிவைத்திருந்த குறிப்புரையும் சேர்க்கப்பட்டுளது. |