முகப்பு தொடக்கம்

தணிகைப் புராணம் சங்க காலத்துத் தமிழ் நலங்களும் சைவ சமயத் தத்துவ நூல்களின் நலங்களும் ஒருங்கேயமைந்த பெரு நூலாகும். ஆகவே இந்நூலைப் பொருளுணர்ந்து பயில்வதற்குத் தொல்காப்பிய முதலிய பழைய இலக்கணப் பயிற்சியும் பாட்டும் தொகையுமாகிய சங்க நூற்பயிற்சியும் ஏனைய இலக்கியப் பயிற்சியும் உடையராதல் வேண்டும். இத்தகையோர் தமிழ் மொழி பெரிதும் புறக்கணிக்கப்பட்டிருந்த வெள்ளையர் ஆட்சிக் காலத்தே மிகவும் அரியராகவே இருந்தனர். ஆதலின் இப்பேரிலக்கியத்தின் பெருமையைத் தமிழகம் உணர மாட்டாதாயிற்று.

இனி, இந்தத் தணிகைப்புராணத்தைச் சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக் கழகம் தோன்றிய காலத்தில் வித்துவான் இறுதி வகுப்பிற்குப் பாடமாக வைத்திருந்தனர். அப்பல்கலைக் கழகத்தில் இத்தணிகைப் புராணத்தைப் பயிற்றுவிக்கும் ஆற்றல் பெற்ற பேராசிரியர் ஒருவரிருந்தனர். அவர் மாபெருந்துறவி. கந்தசாமியார் என்பது அவர் திருப்பெயராகும். அப்பல்கலைக் கழகத்தில் அவர் ஒருவரே இத்தணிகைப் புராணத்தை மாணவர்க்கு அறிவுறுத்தி வந்தனர். யானும் அப்பெரியார்பால் இத்தணிகைப் புராணத்தைப் பயின்ற மாணவருள் ஒருவன் ஆவேன் என்பதைப் பெருமையுடன் கூறிக்கொள்கின்றேன். ஆண்டு மாறிப் பாடங்களும் வேறு வேறு ஆசிரியரிடம் மாறிப் போயினும் இத்தணிகைப் புராண மட்டும் பேராசிரியர் கந்தசாமியாரை விட்டு மாறுவதில்லை.

கந்தசாமியாரவர்கள் மாணவர்க்குப் பாடம் பயிற்றுவதில் பெரிதும் ஊக்கமுடையவர் ஆவார். ஆதலால் மூல நூலாக இருந்த இத்தணிகைப் புராணத்தில் பல்கலைக்கழகத்தில் பாடமாக வந்த பகுதிகளுக்கு மட்டும் இவர் உரையெழுதிவைத் திருந்தனர். இப்பேராசிரியர் உரையெழுதும்போது அவ்வுரையை அச்சேற்றி வெளியிட வேண்டும் என்னும் கருத்தோடு எழுதினாரில்லை. மாணவர்க்குப் பாடம் கூறும்போது மறதி முதலியவற்றால் வழுவுண்டாகாதிருத்தற் பொருட்டே அவர் உரை எழுதி வைத்திருந்தனர்.

இனி, உரையில்லாதிருந்த இத் தணிகைப் புராணத்தின் பெருமையை நன்குணர்ந்திருந்த சைவசித்தாந்த நூற்பதிப்புக் கழகத்து அமைச்சர் உயர்திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள் அப் பேரிலக்கியத்திற்கு நல்லுரை எழுதுவித்து வெளியிட வேண்டும் என்று பெரிதும் விரும்பினார்கள். பல்லாற்றானும் உரையெழுத வல்லாரைக் கண்டு பிடிப்பதில் முயன்று வந்தார்கள்.

பேராசிரியர் கந்தசாமியார் காலஞ் சென்ற பின்னர் அமைச்சர் திரு. வ. திருவரங்கம் பிள்ளையவர்கள், கந்தசாமியார் எழுதிய உரைக்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்