முக்குலத்தோர் உயர்நிலைப் பள்ளித் தலைமையாசிரியர் பணியை ஏற்றுக்கொள்வாராயினர். இச் செய்தியறிந்த பிள்ளையவர்கள் தேவர்பாற் சென்று விலைகொடுத்துக் கந்தசாமியார் உரையினை வாங்கி வருதற் பொருட்டு அதற்கு வேண்டிய பொருளொடு கழக மேலாள் திரு. தீ. வள்ளிநாயகம் பிள்ளையவர்களைத் திருப்பரங்குன்றத்திற்குச் செல்ல விடுத்துத் தாம் அப்பொழுது (4 - 11 - 1956) காஞ்சி நகரத்தில் சிந்தாமணிச் செல்வர், வித்துவான் மே. வீ. வேணுகோபால பிள்ளையவர்கட்கு நிகழ்ந்த மணிவிழாக்காணக் காஞ்சி நகரத்திற்குச் சென்றார்கள். காஞ்சியிற் சென்று கற்றோர் குழுவினிற் கலந்து அவர்களோடு அளவளாவி மகிழ்ந்த பிள்ளையவர்கள் மேற் கூறப்பட்ட தணிகைப்புராணம் பற்றிய செய்தியை அவர்கட்குக் கூறிய பொழுது அவ்வறிஞர் குழாம் தணிகைப் புராணத்தைப் பற்றியும் அதன் ஆசிரியராகிய கச்சியப்ப முனிவர் புலமைப் பெருமை பற்றியும் பிள்ளையவர்கட்குக் கூறியதோடன்றி அந்த மாபெருந் துறவியும் பேரிசைப் புலவருமாகிய கச்சியப்ப முனிவருடைய பூதவுடலை அடக்கம் செய்யத்தகுந்த மாதவமும் இக் காஞ்சி நகரமே செய்திருந்தது என்றும் அறிவிப்பாராயினர். திரு. வ. சு. பிள்ளையவர்கள் இவ்வறிவிப்பினைக் கேட்டு அதனை ஒரு நன்னிமித்தமாகவே கருதி அங்ஙனமாயின் அப் பெரியாருடைய சமாதியைக் கண்டு வழிபாடாற்றவேண்டுமே! என்னுள்ளம் பூரிக்கின்றது என்று கூறி அறிஞர் சிலருடன் கச்சியப்ப முனிவர் புகழுடல் நிற்கப் பூதவுடல் அடக்கஞ் செய்யப்பட்டுள்ள அந்தப் புண்ணிய நிலத்திற்கு வழிபாட்டுப் பொருளோடு சென்றார்கள். திருக்காஞ்சியின்கண் பிள்ளைப்பாளையம் என்னும் பகுதியில் சைவ சித்தாந்த மடத்தைச் சார்ந்ததொரு பொழிலிலே கச்சியப்ப முனிவருடைய சமாதியைக் கண்டு கண்ணீர் பெருகவும் அன்பாலே உள்ளமும் உடம்பும் உருகவும் கைகுவித்துத் தொழுதேத்துவாராயினர். திரு. பிள்ளையவர்கள் திருக் காஞ்சியில் முனிவர் சமாதியை வழிபாடு செய்து வணங்கிய அந்த நாளிலே அதே நேரத்திலே திருப்பரங்குன்றத்திற்குத் தணிகைப் புராணவுரை பெறுதற்குச் சென்றிருந்த கழக மேலாள் திரு. தீ. வள்ளிநாயகம் பிள்ளையவர்கள் அத் திருப்பரங்குன்றத்திலே திரு. சதாசிவத் தேவரவர்களிடம் பொருள் கொடுத்துத் தணிகைப் புராண வுரையைப் பெற்றார்களாம். இந்தச் செய்தியைப் பின்னர்க் கழக மேலாள் அவர்கள் கூறக் கேட்டு இதுவும் முருகப்பெருமான் திருவருளேயாகும் என்று மகிழ்ந்தார்களாம். |