முகப்பு தொடக்கம்

ஈண்டுக் கூறப்பட்ட தணிகைப் புராண வுரைபெற்ற இவ்வரலாற்றை எனக்குக் கழக ஆட்சியாளர் அவர்களே அறிவித்தார்கள். அதுகேட்டு யானும் ஆற்றவும் உவகை கொண்டேன். முன்னவனே முன்னின்றால் எந்தக் காரியந்தான் கைகூடாது?

இனி, இவ்வாறு பிள்ளையவர்கள் தந்தமையனார் முயன்ற முயற்சியைக் கைவிடாது பின்னரும் முயன்று கந்தசாமியார் உரையைக் கைப்பற்றிய பின்னர், அத்தணிகைப் புராணத்தில் எஞ்சிய செய்யுட்கும் உரைவகுத்து வெளியிடுதற்கு விடாப் பிடியாக முயல்வாராயினர்.

அப்பொழுது கழகத்திலிருந்து தமிழ்ப்பணி புரிந்து வந்த ஆன்ற செந்தமிழ்ப் புலவராகிய செல்லூர்க் கிழார் செ. ரெ. இராமசாமிப் பிள்ளையவர்களைக் கொண்டு உரை எழுதுவித்தனர். அப்பெரியார், அகத்தியனருள் பெறுபடலம் முதற்செய்யுளிற் றொடங்கி 114 ஆம் செய்யுள்காறும் எழுதிமுடித்தபொழுது அடியேன் சென்னைக்குச் சென்றேன். இத்தணிகைப் புராண வரலாற்றை அப்பொழுதுதான் பிள்ளையவர்கள் என்னிடம் கூறினார்கள். யானும் பேராசிரியர் கந்தசாமியார் அவர்களிடம் பயிற்சிபெற்ற மாணவனேயாவேன். அவர்பால் தணிகைப் புராண உரையும் கேட்டுள்ளேன் என்று அறிவித்தேன்; அது கேட்ட பிள்ளையவர்கள் இதுவும் இறைவனருளே என்று கருதி, அங்ஙனமாயின் நீங்களே கந்தசாமியாரவர்களால் விடப்பட்ட செய்யுள்களுக்கு உரைவகுத்துத் தரவேண்டும் ஈண்டுக் கழகப் பணிபுரிந்த திரு. இராமசாமிப் புலவரவர்களை அவ்வுரை எழுத விடுத்தமையால் கழகப்பணிகள் சில செய்யப்படாமற் கிடக்கின்றன ஆதலால், அவர் மீண்டும் கழகப்பணியே புரிக. நீங்கள் தணிகைப் புராணவுரையினை வரைந்து தருக ! என்று பணித்தார்கள். அடியேனும் இஃது எம்மன்னை தமிழ்த் தெய்வத்தின் கட்டளையாகவே கருதி அந்தப் பணிசெய்யத் துணிந்து எஞ்சிய செய்யுட்கெல்லாம் என்னறிவிற் கெட்டியவாறு உரை வகுத்து முற்றுவிப்பேனாயினேன்.

இவ்வாறு இத்தணிகைப் புராணவுரை நூல் கழக ஆட்சியாளர் இருவர் இடையறா முயற்சியினாலும் தமிழ்ப் புலவர் மூவர் முயற்சியினாலும் இனிது முடிந்து இற்றைநாள் வெளிவருகின்றது. இந்நூல் இத்தமிழ் நாட்டறிஞர் பெருமக்களால் நன்கு வரவேற்கப்படும் என்று நம்புகின்றேன்.

"பசுகரணங்கள் எல்லாம் பதிகரணங்களாக
 வசிபெறு மடியார்க் காயின் மன்னிய வொருமைதன்னால்
 இசையுமற் றவரி னான்றோர்க் கென்னுரை ஓம்புகென்னக்
 கசிவறு மனத்தினேனும் கட்டுரைப் பதுமாண்பன்றே"

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்