திருத்தணிகைப் புராண உரைநடைச் சுருக்கம் நாடு தொண்டை நாடானது விண்ணுலகத்தை - எள்ளி நகை யாடினாற் போன்ற சிறப்புடன் விளங்கும். ஒன்பது கோள்களும் தந்நிலை மாறி மழை மறுத்த போதும் ஆற்று மணலில் இருந்து ஊறும் நீர் நாட்டின் வளத்தை மேம்படுத்தும். இந்நாட்டில் நாட்டிற்குரிய சிறப்புக்களெல்லாஞ் சிறந்து திகழும். செல்வர்களும் சான்றோர்களும் மிகுந்திருப்பார்கள். இந்நாடு எவ்வகையான பகையும் அற்றது. தேவர்களும், அவுணர்களும், சித்தர்களும், வித்தியாதரர்களும், கருடரும், நாகரும், மனிதரும் ஆகிய எல்லோருக்கும் நன்மை பயப்பதாகிய யாறுகளைத் தன்னகத்தே கொண்டது. நகரம் இத்தொண்டை வளநாட்டில் திருமுருகப்பெருமான் திருக்கோயில் கொண்டருளிய திருத்தணிகை ஒப்பற்ற பெருமை யுடையதாகும். இத்தணிகையானது இந்திரனுடைய விண்ணுலகத்தைப் போலவும், நான்முகனுடைய சத்தியலோகத்தைப் போலவும், திருமாலுடைய வைகுண்டத்தைப் போலவும், சிவபெருமானுடைய சிவலோகத்தைப் போலவும், சிறந்து விளங்கும். மேலும் நான்முகன் திருமால் சிவபிரான் என்னும் மும்மூர்த்திகளைப்போல் சிறப்பினையுமுடையது. இத்தணிகை மலையின் சிறப்பினைப் பிறர் சொல்லக் கேட்டாலும் இம்மலையை அடைந்து முருகக் கடவுளைப் போற்றி வழிபடுவோம் என்னும் நோக்கத்தோடு திருத்தணிகைமலையை நோக்கிப் புறப்பட்டாலும் அவ்வாறு புறப்பட்டவர்களுடைய தீவினைமுற்றும் அழிந்தொழிந்து போகும். தணிகை நகரத்தைச் சூழ்ந்த மதில் குளக் கரையாகும். நவமணிகள் பதித்துச் செய்யப்பட்ட மாளிகைகள் பல நிறங்களையுடைய மலர்களைப் போல் விளங்கும். அந்நகரம் முத்துக்களையுடைய பொய்கையாகும். தணிகைமலையைச் சூழ்ந்த மதில்கள் பூவிதழின் ஒழுங்காகும். விளங்குகின்ற சிறப்பினையுடைய சிகரங் கொட்டையாகும். இத்தகைய தெய்வத்தன்மையுடைய அம்மலையாகிய தாமரை மலரிடத்தில் முருகக் கடவுள் புகழ் பொருந்திய சரவணப் பொய்கையின்கண் பிறந்த காலத்தில் எழுந்தருளியிருந்த தன்மையைப் போல் எழுந்தருளியிருப்பர். இத்தணிகையின் சிறப்பை உள்ளத்தவாவைத் தடுக்கமுடியாமையின் ஒரு சிறிதுரைப்போம். |