முகப்பு தொடக்கம்

கூறுவாயாகில் உன்னையும் திருமாலையும் சிவகணத்தவரையும் நீ படைக்கவில்லை" என்று இப்படிப் பலவாறு கூறவும், நான்முகன் அப்பொழுதுகூட வணங்காமலும் மறுமொழி கூறாமலும் நின்றனன். உடனே முருகப்பெருமான் அந் நான்முகனுடைய தலையிற் பலமாகக் குட்டிக் கடிய சிறையில் அடைத்தருளினர். பிறகு தாம் திருவேங்கடமலையை அடைந்து திருக்கோயில் கொண்டருளியதோடு படைப்புத் தொழிலையுந் தாமே மேற்கொண்டருளினர். இவ்வாறு சிலகாலஞ் சென்றது. திருமால் முதலியோர் இச்செய்தியைச் சிவபிரானிடந் தெரிவித்தனர். சிவபிரான் திருமால் முதலிய தேவர்களைப் பார்த்துச், "செம்மையான ஞான சத்தியின் திருவுருவத்தினைத் தனக்குத் திருவுருவமாகக் கொண்ட தலைவனாகிய முருகன் எம்மினும் வேறுபட்டவனல்லன். யாமும் அவனிலிருந்து வேறாக உள்ளேம் அல்லேம். இளமை பொருந்திய வடிவினையுடைய அம்முருகனிடத்தில் அன்பு செய்தவர்கள் நம் மிடத்தில் அன்பு செய்தோராவர்; பிழை செய்தவர்கள் நம்மிடத்திற் பிழைசெய்தவர்களாவர். மிகுந்த குற்றத்தினைச் செய்த நான்முகனுக்குக் கிடைத்த தண்டமானது தகுதியுடையதேயாகும். அந் நான்முகனை எவ்வாறு சிறையில் இருந்து வெளிப்படுத்த முடியும் ?" என்று கூறினார். தேவர்கள் நான்முகன் செய்த குற்றத்தினைப் பொறுத்தருள வேண்டும் என்று வேண்டிக்
கொண்டார்கள்.

சிவபெருமான் நந்திதேவரை யழைத்து, "நீ முருகனிடஞ் சென்று வணங்கி, நான்முகனைச் சிறையில் இருந்து வெளிவிடுமாறு யாங் கூறியதாகக் கூறிவிடச்செய்து முருகனையும் இங்கு அழைத்துக்கொண்டு வருவாயாக" என்று திருவாய் மலர்ந்தருளினார். திரு நந்திதேவர் அறுமுகப் பரமனிடஞ் சென்று வணங்கிச் சிவபெருமான் கூறிய செய்தியைத் தெரிவித்தார். அவ்வளவில் முருகப்பெருமான் நான்முகனைச் சிறையிலிருந்து விடுவித்துத் தாமும் திருக்கைலையை அடைந்தார். சிவபெருமான் முருகக்கடவுளைப் பார்த்து, "அறிவினாலே பெருந்தன்மையுடையவர்களாகிய பெரியவர்கள் செய்தற்கரிய பிழைகளை மனதறிந்து செய்யமாட்டார்கள். சிற்றறிவுடையவர்கள் அறிந்தோ அறியாமலோ பிழைகளைச் செய்வார்கள். பெரியோர்கள் அக்குற்றத்தினை ஒரு பொருளாக மனத்திற் கொள்ளமாட்டார்கள். ஒறுக்க வேண்டிய காலத்துங் கடிதோச்சி மெல்ல எறிவர். தன்னிடத்திற் சிறந்த அறிவு இன்மையாலே நான்முகன் உன்னை வணங்காது நம் பக்கல் அடைந்தனன். நீ அவனுடைய குற்றத்தைப் பொறுக்காமல் பெரிதாகக் கொண்டு தண்டஞ்செய்து வருத்திவிட்டாய். தேவர்களுடைய துன்பத்தைப் போக்கி இன்பத்தினைக் கொடுக்க வந்த நீ இவ்வாறியற்றுதல் தகுதியாகுமோ ?" என்று உசாவினார்.

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்