முகப்பு தொடக்கம்

முருகக்கடவுள் சிவபிரானைப் பார்த்து "எந்தையே நான்முகனைச் சிறந்த அறிவற்றவன் என்றாய். சிறந்த அறிவில்லாதவன் பிரணவம் என்னும் அருமறையின் மெய்ப்பொருளை உணர மாட்டான். இத்தகைய நிலையில் உள்ளவனுக்குப் படைப்புத் தொழிலை ஏன் வழங்கினை?" என்று உசாவினார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ பிரணவத்தின் பொருளை அறிவாயானால் கூறுவாயாக" என்று சொன்னார். அதற்கு முருகப் பிரான், "அதனைக் கூறவேண்டிய முறைப்படி கூற வேண்டுமே யல்லாமல் கண்டபடி சொல்லலாமோ ?" என்றார். சிவபிரான் முருகக் கடவுளைப் பார்த்து, "நீ விருப்பத்தோடு தங்கியிருக்கும் தணிகைமலைக்கு அருளுரை பெறும்பொருட்டு நாம் வருகின்றோம்.மாசிமகமும் வருகின்றது. அப்பொழுது கூறுவாயாக" என்றார். அவ்வாறே தணிகைமலைக்குச் சென்று வடகிழக்கெல்லையில் ஒரு கணப்பொழுது தணிகாசல முருகனை எண்ணி யமர்ந்தார். குரு நாதனாகிய முருகக்கடவுள் சிவபிரான் இருந்த இடத்திற்குத் தெற்குப் பக்கத்தில் வந்து அமர்ந்து தந்தையாகிய சிவபிரானுக்குப் பிரணவ மறைப் பொருளை முறையோடு உரைத்தருளினார்.

தனக்குத்தானே மகனுங் குருவும் மாணவனும் ஆகிய சிவபிரான் ஓங்கார வடிவினனாகிய முருகக் கடவுளின் அறிவுரையைக் கேட்ட அளவில் பெரு முழக்கஞ் செய்து நகைத்துக் கூத்தாடினார். சிவபெருமான் அவ்வாறு பெரு முழக்கஞ் செய்து இன்பக் கூத்தாடியபடியால் அவ்விடம் வீராட்டகாசம் என்று பெயர் பெற்றது. பிரணவப் பொருளைக் கூறியபடியால் தணிகை பிரணவ அருத்த நகர் என்னும் பெயரையும் பெற்றது. இத் தணிகையில் ஒரு கணப்பொழுது தவம் முதலிய நல்வினைகளைச் செய்பவர்கள் பெறுதற்கரும் பயனை அடைவார்கள்.

குமாரலிங்கம்

ஒருகாலத்தில் முருகக் கடவுள் ஞானசக்தியாகிய வேற்படையைப் பெற விரும்பினார். திருக்கைலையில் உள்ள கங்கையைத் தணிகைமலைக்கு வரவழைத்தார். தாம் இருக்குமிடத்திற்கு வடகீழ்ப்பக்கத்தில் ஆபத்சகாய மூர்த்தியை அமைத்து வழிபட்டார். சிவக் குறியினையும் நிலைபெறுத்திப் போற்றினார். சிவபிரான் முருகக் கடவுளின் திருமுன்னர்த் தோன்றி, "உனக்கு வேண்டியது யாது ?" என்று கேட்டார். முருகக் கடவுள் "அவுணர்களுடைய உயிரைக் குடிக்கும் ஞானசக்தி வேண்டும்" என்று கேட்டார். சிவபிரான் அச்சிறப்பினைக் கொடுத்துச் சிவக் குறியிடையே மறைந்தருளினார். இவ்விலிங்கத்துக்கு குமாரலிங்கம் என்று பெயர். இது மலைமீது கோயிலின் வடக்குச் சுற்றில் உள்ளது. ஞான சத்தி பெற்ற சுவாமிக்கு ஞானசக்திதரர் என்று பெயர். அவரால்

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்