வல்லி உம்பர்கோனிடந் தோன்றி ஐராவதம் என்னுந் தெய்வயானையினால் வளர்க்கப்பட்டுத் தெய்வயானை என்னும் பெயரைப் பெற்றாள். அவளை முருகக்கடவுள் திருப்பரங்குன்றத்தில் திருமணஞ் செய்துகொண்டார். சுந்தரி தன்னுடைய வடிவத்தை நீக்கி நுண்ணுடலோடு தொண்டை வளநாட்டில் மேற்பாடி என்னும் ஊருக்கு அண்மையில் உள்ள மலைச்சாரலில் தவஞ் செய்து கொண்டிருந்தாள். அதே மலைச்சாரலில் திருமாலின் கூறாகிய சிவமுனி என்பவர் தவஞ் செய்து கொண்டிருந்தார். திருமகள் பெண்மானாக அப்பக்கத்தில் சுற்றிக் கொண்டிருந்தாள். சிவமுனிவர் அம்மானின் அழகைக் கண்டார். அதன் அழகு அவருடைய உள்ளத்தைக் கவர்ந்த படியால், காட்சியால் இன்பம் நுகர்ந்து முன்போலத் தவஞ் செய்து கொண்டிருந்தார். அச்சமயத்தில் சுந்தரி அம்மானின் வயிற்றிற் கருவாகச் சென்று அமைந்தாள். கருப்பமடைந்த மான் வள்ளிக் கிழங்குகள் அகழ்ந்தெடுக்கப்பட்ட ஒரு குழியில் குழந்தையைப் பெற்றது. அக்குழந்தை தன்னுடைய இனமாக இல்லாதிருப்பதைப் பார்த்து மருட்சியடைந்து அக்குழந்தையை விட்டுவிட்டுப் போய்விட்டது. குழந்தை பலவகையான அணிகளுடனும் தழையாலாகிய ஆடையுடனும் பழம் பிறப்பின் உணர்ச்சியற்றதாக விளங்கியது. இவ்வாறு தனிமையாக விடப்பட்ட குழந்தை மிகவும் இனிமையான மெல்லிய குரலில் அழுதது. அப்பொழுது இறைவனுடைய அருளால் அவ்விடத்திற்குத் தன் மனைவியோடும் உறுதிச் சுற்றத்தினரோடும் வேடர் தலைவன் வந்தான். அவனுடைய பெயர் நம்பிராசன். அவன் குழந்தையின் அழுகையொலியைக் கேட்டான். மகிழ்ச்சியோடு சென்று அக்குழந்தையை எடுத்தான். தன்னுடைய மனைவியைப் பார்த்துப், "பெண் குழந்தைப் பேறில்லாத நமக்கு மலைக்கடவுளே இக் குழந்தையைக் கொடுத்தருளினார்" என்று கூறித் தன்னுடைய மனைவியின் கையிற் கொடுத்தான். மகிழ்ச்சி மிகுதியால் இன்பக் கூத்தாடினான். நம்பிராசனுடைய மனைவி தன்னுடை தனங்களில் சுரந்த பாலைக் குழந்தைக்குக் கொடுத்து மகிழ்ந்தாள். வேடராசன் தன்னுடைய இல்லத்தையடைந்து தன்னுடைய உறவினர்களோடு விருந்துண்டு மகிழ்ந்தான். தொண்டகப்பறை முழங்கக் குரவைக் கூத்தாடச் செய்தான். பிறகு முருகப்பெருமானுக்குத் திருவிழா நடத்தினான். குழந்தைக்குக் காப்பிட்டு மயிலிறகு கட்டப் பெற்ற அழகிய தொட்டிலில் இட்டார்கள். முதியோர்கள் வந்துகூடி, "வள்ளிக்கிழங்கு தோண்டப்பட்ட குழியில் இக்குழந்தை பிறந்தபடியினால் இதனுடைய பெயர், 'வள்ளி' என்று வழங்குக" என்று சொன்னார்கள். வேடராசன் |