முகப்பு தொடக்கம்

வள்ளியைத்தன்னுடைய மகள் என்று உரிமை பாராட்டி வளர்த்தான். வள்ளிக்கு ஆண்டுகள் பன்னிரண்டு நிறைந்தன. வேடர்கள் குலவழக்கப்படி வள்ளியை நம்பிராசன் தினைப்புனங் காவல் செய்ய ஏற்பாடு செய்தான். வள்ளியம்மையார் பரணில் இருந்து பறவைகளைவிரட்டிக் காலங்கழித்துக் கொண்டிருந்தார்.

நாரத முனிவர் திருத்தணிகைக்குச் சென்று முருகக்கடவுளைப் போற்றி வழிபட்டார். முருகக் கடவுளைப்பார்த்து, "இறைவனே ! இவ்வூருக்கு மேற்குத் திக்கிலே மேற்பாடி என்னும் ஊர் இருக்கிறது. அங்கு மலைச்சாரலில் உள்ள வேடுவர் சேரியில் வள்ளி என்னும் பெயருடைய மாது ஒருத்தி இருக்கிறாள். அவள் அழகெலாம் திரண்டு ஓருருவெடுத்தாற் போன்ற பேரழகினள். அவள் தங்கட்கே உரியவள் என்று எண்ணி இங்கு வந்தேன்" என்று கூறினார்.

முருகக் கடவுள் வள்ளியம்மைமீது காதல் கொண்டார். அவளைக் களவுமணஞ் செய்ய எண்ணினார். அழகுள்ள வேடுவ இளைஞனாகக் கோலங் கொண்டார். வேட்டையாடுபவரைப் போற்சென்று வள்ளியம்மையைக் கண்டார். மெதுவாக நெருங்கி இனிய மொழிகளைப் பேசிக் கொண்டிருந்தார். அச்சமயத்தில் கொம்புகளை ஊதிக் கொண்டு வேடர்கள் சூழ்ந்துவர நம்பிராசன் அங்கு வந்தான். அவ்வளவில் வேட்டுவக் கோலக் குமரன் வேங்கை மரமாக விளங்கி நின்றார். வேடுவராசன் தன்னுடைய மகளுக்கு உணவுப் பொருள்கள் கொடுத்தான். பிறகு அங்குப் புதிதாக நின்ற வேங்கை மரத்தைப் பார்த்து ஐயமுற்றான். அவனோடு வந்தவர்கள் அப்புதிய வேங்கை மரத்தைக் கண்டு இஃதேதோ மாயையாக இருக்கிறது. இதனை உடனே வெட்டியெறிந்துவிட வேண்டுமென்று கூறி அதனை வெட்ட முனைந்தனர். வேடுவராசன் வேடர்களை விலக்கிவிட்டு "இப்புதிய மரம் இங்கு எப்படி வந்தது" ? என்று மகளை உசாவினான். வள்ளியம்மை, "நான் அறியேன்; திடீரென்று விண்ணில் இருந்து நம்முடைய குலதெய்வமே இதனைக் கொண்டு வந்து சேர்த்ததாகத் தெரிகிறது" என்று கூறினாள். "நல்லது; இம்மரம் உனக்கு நிழலைக் கொடுக்கும்" என்று கூறிவிட்டு வேடர்களோடு அவ்விடம் விட்டுச் சென்றான்
நம்பிராசன்.

பிறகு ஒருநாள் வேடராசன் தன்னுடைய மகளிருக்குந் தினைப்புனத்திற்கு வந்தான். அச்சமயத்தில் முருகக் கடவுள் தம்முடைய ஒரு கூற்றினை வேங்கை மரத்தில் இருத்திப் பிறிதொரு கூற்றோடு முதுமைக் கோலங்கொண்டு நம்பிராசனுக்கு முன்னே சென்றார். நம்பிராசனுக்குத் திருநீறு நல்கி வாழ்த்துரை

முன் பக்கம் மேல் அடுத்த பக்கம்