வந்தனராயினும் அத்தொழிலையும் சிவ தொழிலாகவே செய்தார். எங்ஙனமெனில்,
சிவாலயங்களுக்குவேண்டிய பேரிகை, மத்தளம் முதலியவைகளுக்குத் தோலும் வாரும்
கொடுப்பார்; வீணைக்கும் யாழுக்கும் நரம்புகள் தருவார் சிவபெருமான் அர்ச்சனைக்குக்
கோரோசனை அளிப்பார்.

இவ்வாறு சிவ பக்தியிற் சிறந்து விளங்கிய நந்தனார்க்கு ஒரு நாள்,
திருப்புன்கூர் என்னும் திவ்விய ஸ்தலத்தில் கோயில் கொண்டெழுந்தருளியுள்ள
சிவபெருமானைத் தரிசிக்க வேண்டுமென்னும் விருப்பம் எழுந்தது. உடனே அவர்
ஆதனூரினின்றும் புறப்பட்டுச்சென்று திருப்புன்கூரை அடைந்தார். புலையர்கள்
கோயிலுட்செல்ல அருக ரல்லராதலால் நந்தனார், சிவாலயத்துட்சென்று சுவாமியைத்
தரிசிக்க ஏலாதவராய்க் கோபுர வாயிலருகே நின்ற வண்ணம் ஈச்வரனைத் தரிசிக்க
முயன்றனர். அதற்கும் இடங்கொடாது, சந்நிதிக்கெதிரே, நந்தி விக்கிரகம் சுவாமியை
மறைத்துக் கொண்டிருந்தது. ‘ஆலயத்துக்கு வெளியே நின்றுகூட எம்பெருமானைத் தரிசிக்க
ஏலாதிருக்கின்றதே’ என்று நந்தனார் மிகவும் மனம் வருந்தினர். பக்தர் துயரந் தீர்க்கும்
பரமன், நந்தனாரது பக்தியையும் மனவருத்தத்தையும் உணர்ந்து நந்தி தேவரை விலகி
நிற்கப் பணித்தார். உடனே நந்தி அப்புறம் விலகி நின்றது. நந்தனார், இவ்வற்புதச்
செயலால் உளமகிழ்ந்து, சிவபெருமானைக் கண்டுகளிக்கத் தரிசித்துப்பிறகு தமதூர்க்குச்
சென்றார்.

அப்பால், நந்தனார் உள்ளத்தில் சிவ தலங்களுட் சிறந்த சிதம்பர
க்ஷேத்திரத்தில் எழுந்தருளியுள்ள சிவபெருமானைத் தரிசிக்கவேண்டுமென்ற அவா
எழுந்தது. ஆதலின்