நொண்டி நாடகம் ஒரு கேயப்பிரபந்தம் (இசைப்பாட்டு) ஆகும். இதிலுள்ள சிந்துகளெல்லாம் பாடுவதற்காகவே ஏற்பட்டவை. சந்தத்தின் அமைப்பு முதலிலாயினும், ஈற்றிலாயினும் சொற்கட்டுக்களின் மூலமாக விளக்கப்பட்டிருக்கும். ஒவ்வொரு சிந்திலும் நொண்டியான சீர், முதல்வரியிலாயினும், இரண்டாம்வரியிலாயினும், அல்லது ஈற்று வரியிலாயினும் காணப்படும். நொண்டிச்சீரின் காலஅளவிற்கு முந்தின சுரத்தின் இசையே பாடப்படும்.
நாட்டுமக்களுக்கு நொண்டி நாடகம் ஒரு உல்லாசமான பொழுது போக்கை அளிக்கும். மாலைவேளையிலோ, இரவிலோ, இனிய குரலுடைய ஒருவன் சபையோர்முன் நொண்டி-நாடகத்தை உற்சாகமாகப் பாடுவான். ஒரே வர்ணமெட்டில் பல சிந்துகள் பாடப்படினும், கதை சுவைமேம்பட அமைந்துள்ளதனால் சலிப்பில்லாமல் எல்லாரும் கேட்பார்கள். ஹாஸ்யச் சுவை கதையில் கலந்திருப்பதனாலும், சுருதி, தாள, பக்க மேளங்களுடன் சிந்துகள் பாடப்படுவதனாலும், நொண்டி நாடகம் கேட்பதற்கு இனிமையாக இருக்கும்.
சீதக்காதி நொண்டிநாடகத்தில் பூபாளம், நாதநாமக்கிரியை, மோகனம் என்னும் மூன்று ராகங்கள் காணப்படுகின்றன. இவை மனோரம்மியமான ராகங்கள். பாட்டுக்கள் ஆதி தாளத்தில் அமைக்கப்பட்டிருப்பது மிக்க பொருத்தமாகும். இந் நாடகத்தின் நூற்றுஎண்பத்தாறாவது கண்ணியில் தம்புறா, மத்தளம் முதலிய இசைக்கருவிகள் கூறப்பட்டிருக்கின்றன. இவை கவனிக்கத்தக்கவை.
செஞ்சிக்கோட்டை முற்றுகை வரலாற்றுடன் சேர்த்து அமைக்கப்பட்டுள்ள நொண்டிநாடகம், சீதக்காதியைப் பற்றியது. இதில் சீதக்காதியின் புகழை நொண்டி பாடுகிறான். இந்நூலை இயற்றியவர்பெயர் தெரியாவிடினும், இவர் புதிய முஸ்லிம் என்பது தெரிகிறது. இதற்குப் பல சான்றுகள் காணப்படுகின்றன. இஸ்லாமியக் கலைப்பயிற்சி, நாகரிகம் முதலியவற்றை ஒரு சிறந்த முஸ்லிம் அறிவிப்பது போலச் செம்மையுற இவர் அறிவிக்கவில்லை. கடவுள் வாழ்த்து, திருநபி |