viii
செய்தக்காதி நொண்டி நாடகம்
 

குற்றாலக் குறவஞ்சி, கும்பேசர் குறவஞ்சி, சரபேந்திர பூபாலக்
குறவஞ்சி முதலியவை குறவஞ்சி நாடகத்துக்கு உதாரணங்களாகும்.

அதைப் போன்று நொண்டிநாடகத்துக்கும் ஒரு கதைப்போக்கு
ஏற்பட்டுளது. அந் நாடகத்தில் நொண்டி ஒருவனே கதாபாத்திரன் ஆவான்.
அவன் பாடும் சந்தச்சீரும் அவன் பெயருக்கேற்றவாறு தடைபடுவதுபோல்
(விட்டிசைத்தல்) அமைந்திருக்கும்.

இவ்வகை நாடகத்தின் ஆசிரியர் காப்பும், கடவுள் வாழ்த்தும்,
பெரியார்வாழ்த்தும் முதலில் அமைப்பர். பின்னர், பாட்டுடைத் தலைவன்புகழ்
பாடப்படும். கதாநாயகன் நொண்டி என்பதற்கு ஏற்றபடி களரியில்
தோன்றுவான். தன் காமத் துயரைப் பற்றியும், மாதர் கூட்டுறவால் தனக்கு
விளைந்த பொருட்கேட்டைப் பற்றியும், வறுமையைப் பற்றியும் கேட்பவர்மனங்
கசியும்படி பாடுவான். அவன்வறுமை அவனைத் தீய வழியில் பொருள் தேடச்
செய்கின்றது. அவன் ஒரு குதிரையைக் களவு செய்கிறான். களவு செய்கையில்
பிடிபட்டுத் தன் காலும் கையும் துணிக்கப்படுகின்றான். கடைசியில்
தெய்வசத்தியின் துணையால் இழந்த உறுப்புக்களை மீண்டும் பெறுகின்றான்.

பொதுவாக நொண்டி நாடகங்களெல்லாம் இம்முறையிலேயே
அமைக்கப்பட்டிருக்கின்றன. ஆனால், சிலவற்றில் தெய்வசத்தியாலாகும்
நிகழ்ச்சியைக் குறிக்கும் பகுதிகள் வேறுபடுகின்றன.

இவ்வகை நாடகம், இலக்கண வரம்புக்குட்பட்ட இலக்கியங்களுள் இடம்
பெறவில்லையாயினும், கிராமத்தில் வசிப்பவர்களுக்கிடையே பெரிதும் பரவி
வந்துளது. நொண்டிநாடகம் இனிய சந்தச் சுவையும் எளிதில் விளங்கும்
சொற்களும் கொண்டிருத்தலால் யாவரும் கேட்டு மகிழக் கூடியது.
இக்காலத்திலும் கிராமங்களில் இவ்வகை நாடகம் மூங்கிலாலும்
தென்னங்கீற்றாலும் அமைத்த மேடையில் நடிக்கப் படுகின்றது.