நூலாராய்ச்சி
vii
 

‘முத்தலம் புகழும் செஞ்சி முது நகர்க்’ கோட்டையின் முற்றுகை எட்டு
ஆண்டுவரையில் (1689-1697) நீடித் திருந்தமையால், தென்னிந்திய வரலாற்றில்
இஃது ஒரு முக்கியமான சம்பவமாயிற்று. ஜனங்கள் அதை ஒட்டிய பல
நிகழ்ச்சிகளையும் விவரங்களையும் பேசி வந்தார்கள். தவிர, தென்னாட்டில்
முதன்முதல் முகலாயர்கள் பெரும்படையுடன் வந்து தங்கி ஒருகோட்டையை
நீண்ட காலம் முற்றுகையிட்டது ஒரு புதுமையாகும். முகல்படைகள்
எட்டுவருடம் இப் பகுதியில் தங்கியிருந்தமையால், அவர்களுடைய பழக்க
வழக்கம், நடையுடை பாவனை, முதலியவை மக்களிடை கவர்ச்சியை
உண்டாக்கியதனோடு, அவர்களைப்பற்றி அதிகமாக அறிந்துகொள்ள வேண்டு
மென்ற ஆர்வமும், மனக்கிளர்ச்சியும் மக்களுக்கு ஏற்பட்டன.
மேற்கூறியவற்றால், செஞ்சிக் கோட்டையின் முற்றுகை அக்காலத்து மக்களுக்கு
மிக்க பிரசித்தமாயிற்று. எங்கும், எப்போதும், எல்லாரிடையேயும் இதுவே
பேச்சாய் இருந்தது. ஆகலின், நொண்டிநாடகத்தை இயற்றியவர், அப்
பிரசித்தி வாய்ந்த நிகழ்ச்சியையும் சேர்த்து எழுதினால் தம் நூலுக்குப்
பெருமையும், பலரும் விரும்பிப்படிக்கும் சிறப்பும் உண்டாகலாம் எனக்
கருதினார்போலும் ! இது பற்றியே அவர் நாடக பாத்திரமான நொண்டியைச்
செஞ்சிக்கு அனுப்பியுள்ளார் என்று தெரிகிறது. ஆசிரியர் தமது நூலுக்குச்
சிறப்புப் பெறக் கருதியது ஒரு புறமிருக்க, அக்காலத்திய சரித்திர
ஆராய்ச்சிக்குரிய பயனுள்ள சில விஷயங்கள் இந் நூலினால் நமக்குக்
கிடைப்பது பாராட்டிப் போற்றத் தக்கதே.

நொண்டி நாடகம்

தமிழ் இலக்கணத்தில் பிரபந்தங்களுக்கு இலக்கணங்கள்
கூறப்பட்டிருக்கின்றன. உதாரணமாக, குறவஞ்சி நாடகத்தில் நாயகன்மீது
காதல் கொண்ட ஒரு நாயகியின் வரலாறு கூறப்படும். அந்த நாயகன்
அரசனாகவாவது, பிரபுவாகவாவது, தேவனாகவாவது இருக்கலாம். குறத்தி
தோன்றி நாயகியின் கைரேகையைப் பார்த்து அவள் எண்ணம்
நிறைவேறுமென்று குறி கூறிச் செல்வாள். இறுதியில் நாயகியின் எண்ணம்
முற்றுப்பெற்று, கதையும் மங்களகரமாக முடியும்.