மேற்படி ஆண்டு அக்டோபர் மாதத்தில் இராமராயர் ஆங்கிலக் கப்பலில் ஏறிக் கடல் வழியே தப்பி ஓடக் கூடுமென்பதை துல்பகார்கான் அறிந்து அவ்வாறு அவர் தப்பி ஓடுவதைத் தடுக்கும்படி பிரஞ்சுக்காரருக்கு எழுதினார்.
செஞ்சியிலிருந்து கடல்வரையிலுமுள்ள பிரதேசம் முழுவதும் மராட்டியர்-முகலாயர், ஆகிய இருகட்சியாருடைய போர் வீரர்களாலும் கொள்ளையடித்துப் பாழாக்கப் பட்டு வந்தது. மக்கள் தெற்கே தஞ்சாவூர்ப் பிரதேசத்திற்கும், ஐரோப்பியத் தொழிற்சாலைகளைச் சூழ்ந்திருக்கும் பிரதேசத்திற்கும் ஓட ஆரம்பித்தார்கள். அதன் பயனாகப் புதுச்சேரியின் மக்கள் தொகை முன்னிருந்த அளவினும் இரு மடங்கு பெருகி அறுபதினாயிரம் பேர் வரை ஆயிற்று. 1691-ஆம் ஆண்டு ஏப்ரல் மாதக் கடைசிக்குள், முகலாயர்கள் ஒரு பெரும் படையையும் அதற்குரிய தள வாடங்களையும் அமைத்துக்கொண்டு, அவற்றுடன் செஞ்சிக் கோட்டைக்கு எதிரே வந்து தங்கியவுடன், ‘கூடிய சீக்கிரத்தில் இக்கோட்டை முறியடிக்கப் படும்,’ எனச் சுற்றுப் புறத்திலுள்ள மக்கள் எண்ணிவிட்டார்கள். செஞ்சிக்கோட்டை மிக்க உறுதி வாய்ந்ததாய் மலை யுச்சியிற் கட்டப் பட்டிருந்தது. அதனால், முகலாயர் கருதியபடி கோட்டையைக் கைப்பற்ற முடியவில்லை.
1690-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில், மூன்று மராட்டியத் தலைவர்கள் 2000 குதிரைகளடங்கிய படையுடன் இராமராயருக்கு உதவியாய் வந்து கீழ்க்கோட்டையில் உள்ள சக்ரக்குளப் பகுதியில் முகலாயரை எதிர்க்கும் முயற்சியில் தீவிரமாய் இருந்தார்கள். அடுத்த ஆண்டு பிப்ரவரியில் இராமராயர் செஞ்சிக் கோட்டைக்குத் திரும்பி வந்து முகலாயரோடு நீண்ட காலம் போர் செய்தார். தஞ்சாவூர் அரசர், இராமராயரிடமிருந்து சில நாடுகளைப் பெற்றதனாலும், தான் அவருக்கு உறவினர் ஆதலாலும், பொன்னும், பொருளும், போர் வீரரும் செஞ்சிக்கு அனுப்பி முற்றுகைக் காலம் முழுவதும் உதவி புரிந்தார். |