ஆங்கிலேயர் வெடிமருந்து
கொடுத்து உதவியதற்குக் கைம்மாறாக,
துல்பகார் கான் அவர்களுக்கு 1691-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதத்தில் கவுல்
கொடுத்தார். அதன்படி ஆங்கிலேயர் அதுகாறும் அனுபவித்த
சுதந்தரங்களைப் பின்னும் அனுபவிக்கும் உரிமையைப் பெற்றனர்.
துல்பகார் கான் படையெடுப்பை அறிந்த இராமராயர் தம் படைகளையும்
தம் நேசக் கட்சியினரான தஞ்சாவூர்த் திரியம்பகராவ் எச்ச நாயக்கன்
படைகளையும் சேர்த்துக் கர்நாடகப் பீடபூமியின் வட திசையில் அனுப்பி,
முஸ்லிம் தளகர்த்தரைக் கீழ்ப்பிரதேசத்தில் வரவொட்டாமல் தடுக்க
எத்தனித்தார். ஆனால், இராமராயர் அனுப்பிய அப்படை துல்பகார் கான்
பெயரைக் கேட்டதானாலேற்பட்ட அச்ச மிகுதி காரணமாக ஒன்றும்
செய்யாமல் திரும்பி வந்தது. ஏனெனில் துல்பகார் கான் ராஜகட்டத்தில்
மராட்டியர்களை முறியடித்த வீரர்; சாம்பாஜியையும் அவர் குடும்பத்தாரையும்
சிறைப்படுத்திய தீரர் ; கடப்பை, ஆர்க்காடு முதலிய பகுதிகளில்
தொடர்ச்சியாகப் போர் செய்துவெற்றி கொண்ட சூரர். இக்காரணங்களால்,
துல்பகார் கானுடைய பிரசித்திபெற்ற பெயரும், பெருமையும், அவரிடத்திற்
பகைவர் கொண்டிருந்த அச்சமும், செஞ்சிப் பிரதேசம் முழுவதும் பரவி,
பெரிய கலக்கத்தையும் நடுக்கத்தையும் உண்டாக்கின.
இராமராயர் செஞ்சிக் கோட்டையினின்றும் நீங்கித் தம் நண்பராகிய
தஞ்சாவூர் அரசருடைய உதவியையும், தேவனாம் பட்டினத்திலுள்ள
ஆங்கிலேயர் உதவியையும் எளிதாகப் பெறுவதற்கு அனுகூலமாயிருக்கும்
ஓரிடத்தை நாடிச் சென்றார். அப்பொழுது முகலாயச் சேனையை முன்னேற
வொட்டாது தடுப்பதற்குத் தஞ்சாவூர் அரசர் பொருளும் சேனையும்
இராமராயருக்கு அனுப்பிவைத்தார்.
1690-ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் இராமராயர், எலிஹு ஏல்
என்ற பெயரையுடைய சென்னைக் கவர்னருக்கு ஒரு கடிதம் எழுதி, அதில்
தாம் செயின்ட் டேவிட் கோட்டையைக் கட்டுவதற்கு உதவியாக அளித்த
பாலானாவை மறவாமல், தமக்கு வேண்டும் போது உதவி செய்ய
வேண்டினார்.
|