iv
செய்தக்காதி நொண்டி நாடகம்
 

றொடு அவ்வெல்லைக்குள், கம்பெனியாரின் சட்டதிட்டங்கள் பழக்க
வழக்கங்கள் நிலவி வரக்கூடிய அரசியல் நடைபெறவும் அவர்களின்
நாணயங்கள் செலாவணியாகவும் உரிமை உண்டாயிற்று.

இராமராயர் செஞ்சிக்கு வந்த பிறகு ஒரு பக்கம்
ஐரோப்பியர்களுக்கிடையே பரபரப்பும் கிளர்ச்சியும் உண்டாயின. மற்றொரு
பக்கம், முகலாயர்களுக்கு எதிராக மராட்டியரின் செல்வாக்கு நிறைந்த புதிய
தலைநகரமொன்று உண்டாயிற்று. இதை உணர்ந்த அவ்ரங்குசேபு
ராஜகட்டத்திலிருந்து திரும்பி வந்த துல்பகார் கான் என்ற தளகர்த்தரை 1690-
ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் கீழ்த்திசையிலுள்ள மராட்டிய மன்னரை
வென்று வரும்படி கட்டளையிட்டு அனுப்பினார்.

துல்பகார் கான் வருகையைப் பற்றி 1690-ஆம் ஆண்டு செப்டம்பர்
மாதத்து நிகழ்ச்சியைக் குறிக்கும் ஆங்கிலேயக் கிழக்கிந்தியக்
கம்பெனியாருடைய தினக் குறிப்பில் பின்வருமாறு எழுதப்பட்டிருக்கிறது.

“முகலாயப் படைகளின் தளகர்த்தராகிய துல்பகார் கான் இடமிருந்து
நமக்கு ஒரு கடிதம் வந்தது. அவர் முகல் மன்னரின் மந்திரியாராகிய ஆசப்
கான் என்பவரின் குமாரர். அவர் செஞ்சிக் கோட்டையை முகலாயப்
படையுடன் முற்றுகை செய்கிறார். அவர் எழுதிய கடிதத்தில் பல விஷயங்கள்
காணப்படுகின்றன. அவற்றுள் ஆங்கிலக் கம்பெனியார் அவருக்கு இருநூறு
மணங்கு வெடிமருந்தும், ஐந்நூறு போர் வீரர்களும் அனுப்பவேண்டுமென்று
அவர் பெரிதும் வேண்டிக்கொண்டு எழுதியிருக்கிறார். அவ்வேண்டுகோளுக்கு
இணங்காவிடின் நாம் இராமராயர் கட்சியைச் சேர்ந்தவர் என்று நம்மீது
குற்றஞ்சாட்டி முகல்சக்கரவர்த்திக்கு அறிவித்து விடுவார். அதனால், இந்த
நாட்டில் சமாதானமாக நிலைத்து வாழும் நம் வாழ்வுக்கு இடையூறும், நம்
கடல்கடந்த வாணிகத்திற்குக் கெடுதலும் ஏற்படும். ஆகலின் துல்பகார்கானுடன்
நேசத்தோடு இருக்கக் கருதி இருநூறு மணங்கு வெடிமருந்து மட்டுமே
அனுப்பிவிட்டு, போர்வீரர்களை அனுப்ப இயலவில்லை என
அறிவித்துவிட்டோம்.”