பணிந்தெழுந்து நின்று "அரசே! தங்களுடன் இளமையிற் கலை பயின்ற குசேல
முனிவர் என்ற அந்தணர் தங்களைக் காணும் வேட்கையுடன் வெளிவாயிலில்
காத்திருக்கின்றார்" என்றார்கள். கேட்ட கண்ணபிரானும் "விரைந்தோடி அழைத்து
வாருங்கள்" என்றார். வாயில் காவலர் விரைந்து வந்து குசேலரை அணுகித்
"தங்களை இப்பொழுதே அழைத்துவரப் பணித்தனர். எம்முடன் தாமதியாமல் வருக.
சிறிது காலந்தாழ்ப்பின் கண்ணபிரானே நும்மைக் காண வந்திடுவர்" என்று சொல்லி
அழைத்துச் சென்றனர்.
வழியிடையே சுவரில் தீட்டப்பெற்ற கண்ணன் உருவங் கண்டு அதனையே
கண்ணனே என்று மயங்கி வழிபட்டும் மற்றுமுள்ள அரும் பெருங் காட்சிகளைக்
கண்டு இன்பத்திலாழ்ந்தும் சென்றனர். கண்ணபிரான் கதிரவன் வரவு நோக்கும்
செந்தாமரை போலவும், மேகவரவு நோக்கும் மயில் போலவும், தாய் வரவு
நோக்கும் இளங்கன்று போலவும் இவர் வரவு நோக்கி அரிவையர் நடுவண்
அமர்ந்திருந்தார். பின் குசேல முனிவர் தம்பள்ளியருகே நெருங்கி வரக்கண்டு
அணை கடந்த வெள்ளம் போல் விரைந்து வந்து அவரடியில் பணிந்தெழுந்து
மார்பிறுகத் தழுவிக்கொண்டார். பிறகு ஒரு மாளிகை உள்ளிடத்தில் முனிவரை
அரதன பீடத்து அமர்த்தி நறுமணங் கமழும் கலவைநீராட்டி, ஆடையால்
துடைத்துப் பட்டாடை அணிவித்து, மலர்மாலை அணிவித்துத், தூபதீபங் காட்டி
வழிபட்டு அறுசுவை அமுதம் உண்பித்துச், சாமரம் இரட்டித்தம்கையால் அவர்
முதுகைத் தளர்ச்சி நீங்கத் தடவிக் கொடுத்து அவர் வாழ்க்கை நலம் வினவலானார்:
"நண்பனே! நல்லார் நட்பினும் பெரும் பேறு வேறில்லை. நல்லவரால் நன்மை
அடைவார் பலர். நாமிருவரும் பிரிந்து பலநாள் ஆயினும் உன்னிடத்தில்
கொண்டிருக்கும் என்நட்பு என்றுங் குறைந்ததில்லை. நாடோறும் உன் வாழ்க்கை
நிலையை வருவார் போவார்வழிக் கேட்டுக்
|