இவன் பெற்றபேறு யாவர் பெற்றார் என்று கூறினர் சிலர். அருமையான தருமம்
பெருகும் என்று வேதம் முழங்கும் அன்றோ? இவன் தருமம் பல புரிந்ததனால்
இச்செல்வங்களைப் பெற்றுவருகின்றான்; இன்னும் என்ன என்ன செல்வத்தைப்
பெறுவானோ அறியோம் என்றனர் சிலர். எல்லா வுயிரிடத்தும் அருள்
செலுத்துவோர் தேவரினும் உயர்வடைவார் என வேதம் கூறும்; ஆதலால்
இப்பூமியில் இச் செல்வம் பெற்ற உயர்வு மட்டுமோ? மேலும் உயர்வுபெற்று
விளங்குவான் என்றனர் சிலர். கண்ணபிரான் கழலிணையில் மனம் மொழி செயல்
இவற்றை வைத்து வணங்கிய மறையோனுக்கு இது போதுமோ? சொல்வதற்கரிய
செல்வம் இன்னும் பெறுவான் என்றனர் சிலர். கண்ணபிரானது செந்தாமரைக்
கண்ணருள் இம்மறையோன் மாட்டுச் சென்றது, அதற்கேற்பத் திருமகளும் இவன்
பால் வந்து சேர்ந்தாள் என்றனர் சிலர். அரசாளும் பெருஞ் செல்வம் வந்தடைந்தால்
யார்தாம் அதனை விரும்பாதவர் என்றனர் சிலர். கடவுளாற் கொடுக்கப்பட்டது
நன்மையாயினும் தீமையாயினும் இமைப்பொழுது நிற்பதாயினும் எக்காலத்தினும்
நிலைப்பதாயினும் அதனைக் கொள்ளுவதன்றித் தள்ளுவார் உலகில் உள்ளாரோ,
என்றனர் சிலர். மனைவி சொற் கேட்டு்ச் சென்று இப்பரிசு பெற்றுவந்தனன், இவன்
நம் போன்றார்க்குச் செல்வம் ஆவான் என்றனர் சிலர். சான்றோர் செல்வம் வரினும்
வறுமை வரினும் ஒப்பாகக் கொண்டு அமைதியாக வாழ்வர், மயங்கமாட்டார்
என்றனர் சிலர். பற்றறத்துறந்த இம்முனிவனுக்கு இப்பெருஞ் செல்வமும் மகளிர்
புணர்ச்சி யின்பமும் நன்றோ என்றனர் சிலர். தவ முனிவன் ஆகிய சிவநன்
என்பவனும் பெண்கள் போகம் துய்த்துப் பல நாள் இருந்தான் அக்கதை நீங்கள்
அறியீரோ என்றனர் சிலர்.
இவ்வாறு மடவார் பலர்கூற இந்திரன் போலச் சிவிகை மேலமர்ந்து தெருக்கள்
பல கடந்து தம் மனைவாயிலை யடைந்தார் குசேலர். தாம் வாழ்ந்த இலைக்குடில்
வேறு பட்டு மாடமாளிகையாய் இலங்குவது நோக்கி நின்றார். தம்
|