மனைவி சசீலை மேகம் போன்ற கருங்குழலில் மலர் மாலை விளங்கவும்
பின்னலைப் போல நெற்றிச்சுட்டி நிலாப் பிறை முதலிய அணிகள் ஒளிரவும்,
முத்துமூக்கணியும் செவியிற் பொன்னோலையும் திகழவும், சங்குபோன்ற கழுத்திற்
பதக்கமும் பலவகை யணிகளும் பொன்மலைமேல் பல நிறமான அருவியசைந்து
வருவதுபோலக் கொங்கைகளின் மேல் முத்துமாலை, பவளமாலை, பொன்மாலை
ஒளிரவும், முன்கை வளை, தோள்வளை கைகளில் இலங்கவும் கைவிரல்களில்
மோதிரம் ஒளி காட்டவும் பட்டாடையும் அதிற் கட்டிய ஒட்டியாணமும், மேகலைக்
கோவைகளும் மிளிரவும், சதங்கை தண்டை, சிலம்பு கலின் கலின் என ஒலிப்பவும்
கற்பகப் பூங்கொம்பு நடந்ததுபோல் வந்து தன் கொழுநனை எதிர் கொண்டாள்.
முதலில் வணங்கினள்; பொன்னாதனத்தில் இருத்தினள்; பாங்கியர் கரகத்தில்
வார்க்கத் தன் கரத்தாற் கணவன் திருவடிகளை விளக்கினள்; வெண்பட்டால் ஈரம்
துடைத்தாள்; மணப்பொருள் உடலிற்பூசி மலர்மாலை புனைந்தாள். புகையும்
விளக்கமும் காட்டினள். ஆலத்தி சுழற்றினள்; மீண்டும் அடிமேல் வீழ்ந்து வணங்கி
நின்றனள்்; பலவகை வாத்திய முழங்க மாளிகைக்குள் அழைத்துச் சென்றாள்.
குசேலர் மனைக்குட் புகுந்தார். பல அறைதோறும் வெள்ளிக் குவியலும் பொற்
குவியலும் பலவகை மணிக்குவியலும் பவளக் குவியலும் நிறைந்து கிடப்பக்கண்டார்.
பொற்கலப் பேழை முதலியனவுங் கண்டார். இருபத்தேழு மக்களும் பட்டாடையும்
பலவகைப் பணிகளும் பூண்டு பாலும் சோறும் பாயசமும் உண்டு வெறுத்துச்
செருக்கியிருக்கும் புதுமையும் அவர்கள் விளையாடலையும் கண்டார். மடைப்
பள்ளியிற் பலவகை யுலோகங்களாற் செய்த பல்வேறு வகைப் பட்ட கலங்களும்
பல பண்டங்களும் நோக்கி நின்றனர்.
அவ்வாறு நின்றபோது மனைவி விரைந்து வந்து எண்ணெய்க்காப்பிட்டு
நீராடியருள்க என்று வேண்டினள்; நீராடும் இடத்தில் குசேலர்க்குக் குற்றேவல்
மகளிர் புரிந்த பணிகள் பல. ஒருத்தி ஆதனப் பலகை கொண்டு வந்து இட்டாள்.
|