ஒருத்தி பொற் கி்ண்ணத்தில் எண்ணெய் எடுத்து முன்வைத்தாள்; ஒருத்தி விசிறி
வீசினள்; ஒருத்தி எண்ணெயை எடுத்து ஊற்றிக் குசேலர் சென்னியிலும் தேய்த்து
உடல் முழுவதும் தேய்த்தனள். பின்னர் நீராடும் இடத்திற்கு அழைத்துச் சென்றனர்
மாதர். ஆங்கு மகளிர் அனைவரும் கூடி ஒருத்தி எண்ணெயைப் போக்க, ஒருத்தி
வெந்நீரை வார்க்க, ஒருத்தி யீரத்தைப் போக்க, ஒருத்தி வேறு உடை கொணர்ந்து
கொடுக்க இவ்வாறு பணி புரிந்து நின்றனர் பலர். முழுகி யுடை யுடுத்துக் கடவுட்
பூசை முடித்து உண்ணும் இடம் சென்றார். தம் மனைவி பலவகைக் கறி வகைகளும்
உணவும் இலையிற் படைக்க விலாப் புடைக்க உண்டார். விருந்தினராகப் பல
மறையோரும் உடன் உண்டனர். பின்னெழுந்து சென்றார். வந்தவர்க்கு வெற்றிலை
பாக்கு வழங்கினார். வந்தவர் யாவரையும் அவரவரிடம் செல்லுமாறு விடுத்தனர்.
கற்புடைத் தம் மனைவியுடன் கூடிக் களித்தார். இவ்வாறே ஒவ்வொரு நாளும்
உண்டுறங்கி இன்பப் பொழுது போக்கினர்.
ஒருநாள் அந்தப்புரத்தின் மனைவிமக்கள் ஒருவரும் வராவகை இருபுறக்
கதவுகளையும் அடைத்துத் தாழிட்டுத் தனியே யிருந்து சிந்தித்தார். ஈட்டல், காத்தல்,
இழத்தல் என்ற மூன்றும் பொருளால் விளையும் துயரம்; இப்பொருளுடையோர்
பாவச் செயலும் புரிய நேரும்; பாவத்தால் நரகத்துயரமும் வரும்; அறிவுடையோர்
இப்பொருளை விரும்புவரோ? விரும்பார். ஊழ்வலியாற் பெருஞ்செல்வம் வந்தாலும்
துறந்து பேரின்பம் அடையும் குறிக்கோளுடன் வாழ்வார். ஐம்புலன்களையும்
அடக்கி எல்லாவற்றையும் துறந்துவிடலே இன்பம் பயக்கும். சிலவற்றிற்
பற்றிருப்பினும் பிறவித் தொடர்ச்சி நீங்காது. பிறவியறுக்கத் துணிந்தவர்க்கு உடம்பின்
பற்றும் விடுத்தலே நலம்.
யான் என்றும் என தென்றும் உடம்பையும் பொருள்களையும் எண்ணி
மயங்குவது பிறவிக்கு ஏதுவாகும். இம் மயக்கத்தை ஒழித்தவரே முத்தியுலகத்திற்
செல்லுவார்
|