வாணாசுரன்:-உசைக்குத் தந்தை. கண்ணன் மகன் உசையைக் காதலித்துக்
களவிற் புணர்வதுகண்டு அவனைச் சிறை செய்தவன். ஆயிரங் கைகளுடையவன்.
கண்ணனோடு போர் செய்து கைகளை இழந்தவன். [12 (பா) 700 ]

வாலி:-இந்திரன் மகன். சுக்கிரீவனுக்குத் தமையன். சுக்கிரீவன் மனைவியைக்
கவர்ந்து சுக்கிரீவனையுந் துன்பப்படுத்திக் கொலைசெய்ய முயன்றவன். சுக்கிரீவன்
இராமனிடம் அடைக்கலம் புக அவன் பொருட்டு இராமனாற் கொல்லப்பட்டவன்.
இவன் மகன் அங்கதன். (673)

வீடணன்:-இராவணனுடன் பிறந்த தம்பி. கும்பகருணனுக்கும் இளையவன்.
இராவணன் சீதையைச் சிறை செய்தது குறித்து வெறுத்து இராமன்பால் அடைக்கலம்
புகுந்தவன். இராவணன் இறந்தபின் இலங்கைக்கு மன்னனாக இராமனால் முடி
சூட்டப்பட்டவன். (674)

வியாதன்:- பராசர முனிவனுக்குப் பரவர் குலப் பெண்வயிற்றிற் பிறந்தவன்.
வேதங்களை நான்குவகையாக வகுத்ததனால் வேதவியாதன் என்ற பெயர்
பெற்றவன். சுகமுனிவனைப் பெற்ற தந்தை இவன். 15 (பா)

விராதன்:- இராமனாற் கொல்லப்பட்ட ஓர் அரக்கன்.(670)

வீடுமன்:- கங்கையின் மகன், சந்தனுவேந்தனுக்கு மைந்தன். பாண்டவர்க்கும்
துரியோதனன் முதலியவர்க்கும் பாட்டன். தந்தை பரிமளகந்தியை மறுமணம்
புரிவதற்காகத் தனக்குரிய பட்டத்தையும் துறந்து மணம் புரியாமல்
விரதமாக இருந்தவன். (703)