நீங்காத அன்பும் சாந்தமும் அமைந்தவள். நற்பண்பனைத்தும் ஒரு வடிவங்கொண்டு
வந்தது போலத் தோற்றம் உடையவள். அவளுடன் கூடி இல்லறம் நடத்தி இனிது
வாழ்ந்தனன் குசேலன். இறைவன் இவ்விருவர்க்கும் இருபத்தேழு மக்களை யளித்தனன்.
வறுமை வாழ்க்கையில் மக்களை வளர்ப்பது எவ்வாறு என்று கலங்காது தன்
கடமையையியற்றிக் காலங்கழித்தான்.

மலைபோலக் குவிந்து கிடக்கும் பெருஞ்செல்வ முள்ளவர் பலர் மகவின்றி வருந்த
அவர்கட்கு ஒரு மகவும் அளியாதிருக்கின்றான் படைக்குங் கடவுள். வறுமையால்
வாடி வருந்தும் இக்குசேல முனிவர்க்கு இருபத்தேழ் மைந்தரைக் கொடுத்தான் எனில்
என்னே அவன் படைப்பின் அருமை!

வறுமையென்னும் பிணி குசேலர் வாழ்க்கையிற் பற்றி விடாது வருத்தத்
தொடங்கியது. "பல்லெலாந் தெரியக் காட்டிப் பருவரன் முகத்திற் கூட்டிச், சொல்லெலாஞ்
சொல்லிக் காட்டித் துணைக்கரம் விரித்து நீட்டி, மல்லெலா மகல வோட்டி மானமென்பதனை
வீட்டி, இல்லெலா மிரத்தலந்தோ விழிவிழி வெந்த ஞான்றும்" என்று கருதிய குசேல
முனிவர் இரத்தற்றொழிலை மேற் கொண்டிலர். காட்டில் இயற்கையாக முளைத்து விளைந்து
உதிர்ந்து கிடக்கும் நீவாரப் புல்தானியத்தைப் பொறுக்கியெடுத்து வந்து மனைவியிடங்
கொடுப்பார். அவள் அதனை வாங்கிக் குற்றி யரிசியாக்கிக் கஞ்சியாகச் சமைத்து
விருந்தினர்க்கொரு பங்கு வைத்துக்கொண்டு தன் கணவருக்குரிய பங்கினைக் கொடுப்பாள்.
அதனை வாங்கியுண்டு மகி்ழ்ந்து திருமாலடியை மனத்துட்கொண்டு வாழ்வார். இஃது
இவர் வாழ்வாயிற்று.

சுசீலை மக்கட்கு வகுத்த பாகக்கஞ்சியை மட்பானையில் வைத்து அகப்பையால்
முகந்து ஒரு பிள்ளைக்கு ஊற்றும் போது மற்றொரு குழந்தை கைந்நீட்டும்,
அக்குழந்தைக்கு மேல் விழுந்து மற்றும் ஒரு குழந்தை கைந்நீட்டும், எக்குழந்தைக்கு
முதலில் ஊற்றுவதென்று திகைப்பாள்; என்