நம்
நாட்டு மொழி இலக்கியம், பேரிலக்கியம், சிற்றிலக்கியம் எனப் பிரிக்கப்பட்டுள்ளது.
பத்துப்பாட்டு, எட்டுத்தொகை, பதினெண்கீழ்க்கணக்கு, சிந்தாமணி முதலிய ஐம்பெருங்காவியம்,
சூளாமணி முதலிய சிறுகாப்பியம், பெரியபுராண முதலிய பல புராணங்கள், பாரதம் இராமாயணம்
முதலிய பெருங்காப்பியங்கள் ஆகிய பலவும் பேரிலக்கியமென்று பேசப்படும். பிற்காலப்
புலவர், கடவுளருள் கருதியும், புரவலர் பொருள் கருதியும் பாடிய கலம்பகம், உலா, மடல்,
பிள்ளைத்தமிழ், தூது, கோவை, அந்தாதி, பரணி, குறவஞ்சி, பள்ளு போன்ற நூல்கள் யாவும்
சிற்றிலக்கியமெனச் செப்புவர். நாட்டு மக்கள் நலங்கருதி இயற்றிய நூல்கள் சிறியவையாயினும்
பேரிலக்கிய மென்றே பேசுவது தக்கது. அருளும் பொருளும் பெறுதலாகிய தந்நலங் கருதிப்
பாடியவை பெரியவையாயினும் சிற்றிலக்கியத்துட் சேர்க்கப்படும், தொண்ணூற்றாறு வகைப்படும்
அச்சிற்றிலக்கியம். அவற்றுள் உலா என்பதும் ஒன்று.
"ஆதியுலா" என்று சிறப்பித்துக் கூறப்படுவது "திருக்கைலாய
ஞான உலா" ஒன்றே. இறைவனருள் கருதி இயற்றியது; காலத்தான் முற்பட்டது; நாயன்மார்களுட்
சிறந்த சேரமான் பெருமாணாயனாராற் பாடப்பட்டது. ஆதலின், அது சிறப்பு வாய்ந்ததெனவறிக.
அடுத்தது ஒட்டக்கூத்தராலியற்றப்பட்ட மூவருலாவாம். அவற்றுள் முன்னிற்பது விக்கிரமசோழனுலா. இவ்விக்கிரம சோழனுலா என்ற நூல் மட்டும் கி. பி. 1914 இல் மதுரைத்
தமிழ்ச் சங்கத்துச் செந்தமிழ் வாயிலாக முதலில் வெளிவந்தது. பின்னர் அடையாற்றுக்
கல்லூரித் தமிழாசிரியர் அ. கோபாலையரவர்கள் 1926 இல் மூவருலா என்று ஒன்றாகப்
பதிப்பித்து வெளியிட்டனர். 1946 ஆம் ஆண்டு பழையவுரை, குறிப்புரை, விசேடக் குறிப்பு,
பாடபேதம் வரைந்து மூவருலாவையும் ஒன்றாகச்சேர்த்து அச்சிற் பதித்து வெளியிட்டனர்
டாக்டர் உ. வே. சாமிநாதையரவர்கள். அப்பதிப்பே இதுகாறும்உலவுகின்றது.
|