பக்கம் எண் :

பக்கம் எண் :1

விக்கிரம சோழனுலா

சோழர் குலம் தோன்றிய வழிவழிமன்னர்


 

1



5
சீர்தந்த தாமரையாள் கேள்வன் றிருவுருவக்
கார்தந்த வுந்திக் கமலத்துப் - பார்தந்த
ஆதிக் கடவுட் டிசைமுகனும் ஆங்கவன்றன்
காதற் குலமைந்தன் காசிபனும் - மேதக்க
மையறு காட்சி மரீசியும் மண்டிலஞ்சேர்
செய்ய தனியாழித் தேரோனும் - மையல்கூர்



 

வரிகள் 1 - 6 : சீர்தந்த தாமரையாள் .............தேரோனும்

சொற்பொருள் : பலவகைச் சிறப்புகளையும் அளித்த திருமகள் கணவனாகிய அழகிய வடிவமுள்ள மேகம் பெற்ற உந்தித்தாமரையில் உறைந்து பூவுலகத்தைப் படைத்த முதல் தெய்வமாகிய நான்கு முகங்களையுடைய பிரமனும், அவனுடைய விருப்பமான நன்மைந்தனாகிய காசிபனும், மேன்மை பொருந்திய குற்றமற்ற அறிவுடைய மரீசியும், வட்டவடிவமான சிவந்த ஒற்றைச் சக்கரத்தையுடைய தேரில் வருவோன் ஆகிய சூரியனும்.

விளக்கம் : சீர்தந்த என்பது, விக்கிரமசோழனாகிய பாட்டுடைத் தலைவனுக்குப் பத்துப் பொருத்தங்களும் அமைந்த சீராதலின் முன் வைத்தார். சீர் என்பது மங்கலச்சொல். அதனை முன் வைப்பது மங்கலப்பொருத்தம். சொல், எழுத்து, தானம், பால், உண்டி, வருணம், நாள், கதி, கணம் ஆகிய ஏனைப் பொருத்தங்களையும் ஆய்ந்து காண்க. செல்வச்சிறப்புப் பலவும் மக்கட்குத் தருபவள் திருமகள் ஆதலாற் "சீர்தந்த தாமரையாள்" என்றார். "நீரும் நிழலும் நிலம்பொதியும் நெற்கட்டும், பேரும் புகழும் பெருவாழ்வும் - ஊரும், வருந்திருவும் வாழ்நாளும் வஞ்சமிலார்க் கென்றுந், தருஞ்சிவந்த தாமரையாள் தான்" என்ற பாடலையும் நோக்குக. திருமாலைக் கார் என உருவகஞ் செய்தார் கரியநிற மமைந்திருப்பது குறித்து. கார் தந்த திசைமுகன், பார்தந்த திசைமுகன், ஆதிக்கடவுள் திசை முகன் எனத் தனித்தனி கூட்டிப் பொருள் கொள்க. திசை நான்கு ஆதலால் நான்கினை யுணர்த்திற்று. திசைபோலு முகமுடையவன் என்க. உந்தி - கொப்பூழ். திருமால் கொப்பூழில் ஒரு தாமரைப்பூ மலர்ந்து அம் மலரிற் பிரமன் தோன்றி உலகத்தை முதலிற் படைத்தனன் என்பது நூல் மரபு. காட்சி - அறிவு. சூரியன் ஒற்றைச்சக்கரமுடைய தேரிற் பச்சைப்புரவி ஏழும் ஈர்க்க அருணனாகிய தேர்ப்பாகன் செலுத்த வருவான் என்பது மரபு. அதனால் "தனியாழித் தேரோன்" என்றார். ஆசிரியர் சோழர்குல வரலாறு கூறத் தொடங்கியவர், திருமால் பெற்ற மைந்தன் பிரமன், அவனுடைய மைந்தன் காசிபன், அவனுடைய மகன் மரீசி, அவன் பின் தோன்றியவன் சூரியன் என வழிவழி விளக்கினர் எனக் காண்க ஆங்கு : அசை. காட்சி - அறிவு. அறிவுள்ள மரீசி எனக் கொள்க. மண்டிலம் - வட்டம்.