வரிகள் 6 - 12 : மையல்கூர் சிந்தனை ஆவிற்கு............பூபதியும் சொற்பொருள் : மயக்கம் மிகுந்த கவலையையுடைய பசுவின் பொருட்டு அதன் கவலை நீங்கும்படி சிறந்த தன் தேர்ச்சக்கரத்தைத் தன் மைந்தன் மேற் செலுத்திக் கொன்றவனாகிய மனுச்சோழனும், குளிர்ந்த இடமாகிய யாவரும் நீராடுதற் கேற்ற ஆற்றுத்துறையில், கொல்லும் புலியும் புல்வாயும் கூடி நீருண்ணுமாறு செய்த மன்னவனும், பெரிய வானவூர்தியைத் தனியே நடத்திச் சென்ற அரசனும், போக பூமியாகிய தேவருலகத்தைக் காத்த வேந்தனும். விளக்கம் : மறவோனும் என்பதும் பாடம். அதுவே சிறந்தது, தன் ஒரு மைந்தனைத் தானே தேர்க்காலின் கீழ்க் கிடத்திச் சக்கரத்தையுருட்டிக் கொன்றான். இத்தகைய வீரச் செயல் மற்றை மன்னரிடம் காண்டல் அரிதாதலான், இவனே மனுநீதிகண்ட சோழன். வைவச்சுத மனு என்பவன் வேறு. இவன் காலத்திற்கு முன்னரே மனுநூல் இருந்ததென்பதும், அந்நூலின் வழி அரசுபுரிந்தவன் இவன் என்பதும்' "மெய்ம்மனுப் பெற்ற நீதியும் தன் பெயராக்கினான்" எனவும், "தொன்மனு நூற்றொடை மனுவாற் றுடைப்புண்டது" எனவும், பெரிய புராணம் கூறுவதால் அறியலாம். பைந்தடம் - குளிர்ந்த இடம். தடம் - பொய்கையும் ஆம். ஆயினும், அப்பொருள் சிறப்பின்று என அறிக. பல விலங்குகளையும் கொல்லும் இயல்புடையது புலி என்பது தோன்ற ‘அடுபுலி' என்றார். புல்வாய் - மானினத்தைச் சார்ந்தது. புலிக்குப் பகையானது மான் ஒன்றே அதனைத்தான் விருப்பமாகக் கொன்று தின்னும் அது - அப் புலியுடன் புல்வாய் நின்று நீருண்டல் காண்பது அரிது. அத்தகைய அரிய செயல் அம்மன்னன் நீதியால் அவன் நாட்டில் நிகழ்ந்தது. அந்நிகழ்ச்சியைக் கண்ட மன்னவன் அவன் என்பது தோன்ற, "புலியும் புல்வாயும்.......ஊட்டிய கொற்றவன்" என்றார். இவன் ‘மாந்தாதா' என்ற பெயருடையவன். மாக விமானம் - வானத்திற் செல்லும் ஓர் ஊர்தி. இதனைத் ‘தெய்வவிமானம்' எனவும், ‘இந்திர விமானம்' எனவும் கூறுவர். இவன் பெயர் இன்னதெனத் தெரிந்திலது. "இந்திரவிமானம் ஊர்ந்த சோழன் என்று ஒருவன் பெயர் ‘சோழ ராசாக்கள் சரிதம்' என்னும் பழைய நூலிற் காணப்படுகிறது" எனக் கலிங்கத்துப் பரணி உரையில் வை. மு. சடகோபராமானுசாசாரியர் குறிப்பிட்டுள்ளார். போகபுரி என்பதும் பாடம். அதுவும் போகபூமியாகிய தேவருலகத்தையே குறிக்கும். மண்ணுலகத்திற் பிறந்த மாந்தரில் அறம்புரிந்தவரும் போர்க்களத்தில் இறந்தவரும் சுவர்க்க உலகம் புகுவர் எனவும், அவர் அரம்பையருடன் கூடிப் போகம் நுகர்ந்து நரை திரை மூப்புப் பிணியின்றி வாழ்வாரெனவும் நூல்கள் கூறுவதால் போகபுவி அதுவேயாம். அவ்வுலகத்தை ஒரு காலத்துக் காத்த மன்னன் முசுகுந்தனாதலால் அவனைப் "போகபுவி புரந்த பூபதி" என்றார். குமரக்கடவுள் வரும் அளவும் இவன் இந்திரன் வேண்டுகோளால் தேவருலகத்தைக் காத்திருந்தான் எனவும், இரவும் பகலும் விழித்திருந்து காத்த சோர்வு நீங்குவதற்காக நீண்ட காலம் தூங்கும் வரத்தைத் தேவர்கள்பாற் பெற்றனன் எனவும் பாகவதம் கூறுகிறது. குலோத்துங்கசோழனுலாவில் இவன் "சோராத், துயில்காத் தரமகளிர் சோர்குழைகாத் தும்பர், எயில்காத்த நேமி யிறையோன்" எனப் பாராட்டப்பெறுகிறான். இங்கு மனு, மாந்தாதா, முசுகுந்தன் என்ற மூவரும் சூரியன் வழிவந்தோர் என்பது கூறப்பட்டது. |