வரிகள் 12 - 20 : மாகத்துக்கூற அரிய............கைப்பிடித்த கோவும் சொற்பொருள் : தேவருகத்திற் சென்று கூறுவதற்கு அரிதாய மந்திரங்களைக் கொண்டுவந்து தெளியும்படி இயமனுக்கு வழக்குரைத்த சோழனும், எமன் பகையை நீங்கிப் புறங்காட்டி ஓடியொளிக்கும்படி கிழவர்களுக்குச் சாடி வகுத்துக் கொடுத்த மன்னவனும், பகைவர்கள் கட்டிய வானத்தில் அசைந்து திரியும் மதிலை யழித்த சோழனும், மேல் கடலில் உள்ள நீரைக் கீழ் கடற்கு வரும்படி செய்த வேந்தனும் பாதாள வுலகமாகிய நாகருலகம் புகுந்து தன் பெரும் புகழால் நாகர் கன்னிகையை மணந்த சோழனும். விளக்கம் : இயமனுக்கு முன் சென்று வழக்குரைத்தவன் கிள்ளிவளவன். இவன் பெருநற்கிள்ளி பெருங்கிள்ளி என்றும் பெயர் பெற்றவன், "எழக்குரைக்கும் பேழ்வா யிருங்கூற்றுக் கேற்ப, வழக்குரைத்த கிள்ளிவளவன்" எனக் குலோத்துங்க சோழனுலாவினும் வருதல் காண்க. (சங்கர. 5.கலிங்கத். இராசபாரம் 13, இவன் குறிக்கப்படுகின்றான்.) வழக்கு இன்னதெனத் தோன்றவில்லை. மனு - மந்திரம். முதுமக்கட்சாடி வகுத்தவன் சுரகுரு என்ற சோழன் என்பர். நாபாகன் என்று குலோத்துங்கசோழனுலாப் பழைய உரையாசிரியர் கூறுவர். "புவனியின்மே லனைத்துயிரும் வீவதிலையாக நமன்மேல் வென்றிகொண்டவனும்" என்று கலிங்கத்துப்பரணி ஆசிரியர் கூறுகின்றார். "அணிபெற வெழுதிய வழகிய குரைகவி னுட்செறி மட்சாடி, குடிபுக முடிபுனை சுரகுரு வழிழுதல் கொட்டுக சப்பாணி" எனக் குலோத்துங்கன் பிள்ளைத்தமிழ் குறிக்கின்றது. "சித்தமகிழ்ந் தீனமறச் செங்கோனடாத்த நமன், உத்தமனென் றந்நா ளுயிர்கொடுபோ காமையினால், மொய்த்த முதியோர்க்கு முதுமக்கட் சாடி பல, வைத்தகுல தீரனே மன்னாகோ மன்னாகோ" என்பது திருவெண்காட்டுப் புராணம். இதனால், இம் மன்னன் அரசாளுங்காலத்துக் கூற்றுவன் வந்து மக்களுயிரைக் கொண்டுபோகாத காரணத்தால் முதுமக்கள் உயிருடன் இருந்தனர் என்றும், அவர்களை மண்ணாற்செய்த தாழியில் வைத்துக் காத்தனர் என்றும், அங்ஙனம் காப்பதற்கு ஆணை தந்தவன் சுரகுருவாகிய சோழனென்றும் நாம் அறியலாம். வீரத்திற்கஞ்சியோ நெறிமுறை கண்டஞ்சியோ கூற்றுவன் அம் மன்னன் நாட்டுமக்கள் உயிரைக் கொண்டு போகாதிருந்தனன் என்பது ஆராய்தற்குரியது. தூங்கு மெயிலெறிந்த சோழன் யாவன் என அறிதற்குத் தக்க சான்று ஒன்றும் இன்று, "திறல்விளங் கவுணர் தூங்கெயிலெறிந்த, விறன்மிகு முரசின் வெல்போர்ச் சோழன்" (தொல். களவி. சூ. 11, ந. மேற்) எனக் கூறப்படுவதாலும், புறநா,39, குலோத். உலா 13 பழமொழி 150, சிலப். காதை. 29, மணிமே 1,3 ஆகிய நூல்களினும் இச் செயலே கூறப்படுவதாலும் தூங்கெயிலெறிந்த சோழன் ஒருவன் இருந்தானெனவும், அசைந்து திரிந்த வானத்திலுள்ள அரண் மூன்றையும் அழித்தவன் அவன் எனவும் அறியலாம். இவன் புரிந்த வேறு செயல், இவன் பெயர், காலம் முதலியவை அறிதற்கு வழியின்று. மேல்கடல் நீர் கீழ்கடற்கு விட்டோன் பெயர் சங்கரண (ஸம்கர்ஷண) சக்கரவர்த்தி எனவும், சமுத்திரஜித் எனவும் கூறுவர். இவன் கப்பல் போக்கு வரவு கருதி நடுவில் இருந்த பூமியை வெட்டி மேல்கடனீரும் கீழ்கடனீரும் ஒன்றாகச் சேரும்படி செய்தான் என்று தெரிகிறது. "புணரி யொன்றினிடை யொன்று புகவிட்ட வவனும்" (கலிங்கத்.193) எனக் கூறுகின்றது. அன்றியும், "மேல்கடல் கீழ்கடற்கு விட்டகோன்" (குலோத். உலா. 28) எனவும், "குடகடற்குச் சார்புகுண, கடலே யாக்கும் வடகடற்குந் தென்கடற்கு மன்னன்" (இராசராச. உலா 27, 28) எனவும் ஆசிரியர் கூறுவதாலும் அறியலாம். நாகர் குலமகளைக் கைப்பிடித்த கோ, சூரவாதித்த சோழன் எனவும், அவன் நாகருலகஞ் சென்று நாகர் கன்னியாகிய காந்தி மதியை மணந்து, அங்கிருந்து வெற்றிலைக் கொடியைச் சோழநாட்டிற்குக் கொண்டு வந்தனன் எனவும், இவ் வரலாறு செவ்வந்திப்புராணம், உறையூர்ப்புராணம் இவற்றுட் கூறப்பட்டுள்ளது எனவும், நாகவல்லி என வடமொழியில் வெற்றிலைக்குப் பெயருள்ளது சான்றாம் எனவும் டாக்டர் உ. வே. சாமிநாத ஐயர் அவர்கள் கூறியுள்ளார். மணிமேகலை காதை 24. வரி 29 முதல் 59 வரை கூறிய நெடுமுடிக்கிள்ளி வரலாறும், பெரும் பாணாற்றுப்படை 29 - 37 வரிகளுக்கு நச்சினார்க்கினியர் விளக்கங் கூறிய வரலாறும் காண்க. பொருந்துவதை யாய்ந்துகொள்க. முசுகுந்தனுக்குப் பின் கிள்ளிவளவன், சுரகுரு, தூங்கெயிலெறிந்தவன், சமுத்திரஜித், சூரவாதித்த சோழன் அல்லது நெடுமுடிக்கிள்ளி இவர்கள் அரசுபுரிந்தனர் என்று கொள்க. |