பக்கம் எண் :

பக்கம் எண் :4

விக்கிரம சோழனுலா

சோழர் குலம் தோன்றிய வழிவழிமன்னர்

 
20





26
குலமகளைக் கைப்பிடித்த கோவும் - உலகறியக்
காக்குஞ் சிறுபுறவுக் காகக் களிகூர்ந்து
தூக்குந்துலைபுக்க தூயோனும் - மேக்குயரக்
கொள்ளுங் குடகக் குவடூ டறுத்திழியத்
தள்ளுந் திரைப்பொன்னி தந்தோனும் - தெள்ளருவிச்
சென்னிப் புலியே றிருத்திக் கிரிதிரித்துப்
பொன்னிக் கரைகண்ட பூபதியும் - இன்னருளின்



 

வரிகள் 20 - 26 : உலகறியக் காக்கும்..........கரைகண்ட பூபதியும்


சொற்பொருள் :
இவ்வுலகத்தார் யாவரும் அறியும்படி தன்னாற் காக்கப்பட்ட சிறிய ஒரு புறாவுக்காக மகிழ்ச்சி மிகுந்து நிறுக்குந் தராசில் ஏறி நின்ற மனத்தூய்மையுடையவனான சிபிச்சக்கரவர்த்தியும், மேல் உயரங்கொண்ட குடகுமலையைப் பிளந்து அலைமோதுங் காவிரி இழிந்து வரும்படி செய்த சோழனும், தெளிந்த அருவியையுடைய இமயமலைச் சிகரத்திற் புலிக் கொடியை நாட்டி மேருமலையைத் திரியும்படி செய்து காவிரியாற்றுக்குக் கரைகட்டிய மன்னனும்.


விளக்கம் : துலைபுக்க தூயோன் சிபி. இவன் வரலாறு பல நூல்களிற் கூறப்பட்டுள்ளது. கலிங்கத். இராசபா 13, புறநா 37,39,43,46, சிலப்பதிகாரம் காதை 20 : வரி 52, 53, 58. 27 : 166 - 168; கம்பரா, குலமுறை, 7, குலோத்........உலா, 17, இராச............உலா 6 ஆகிய இடங்களிற் காண்க.

    பொன்னி தந்தோன் சிவூகன் என்பர் டாக்டர் உ. வே. சாமி நாத ஐயர் அவர்கள். இவனைக் காவிரிச்சோழன் என்று சோழராச சரித்திரமும், கவேரன் என்று சிலப்பதிகாரமும், காந்தமன் என்று மணிமேகலையும், சித்திரரதன் என்று திருவலாங்காட்டுச் செப்புப் பட்டயமும் கூறுகின்றன. குலோத். உலா 15, இராச. உலா 15, கலிங்கத்துப். இராசபா. 15 இவற்றிலும் இவ்வரசன் கூறப்படுகின்றான்.

    பொன்னிக் கரைகண்டபூபதி கரிகாலன் என்பர், "தொக்கலியின் மூவாயிரத்துத் தொண்ணூற்றின், மிக்க கரிகாலனே னுந்தான் - பக்கம், அலைக்கும் புகழ்ப்பொன்னி யாறுகரை கண்டான், மலைக்கும் புயத்தானும் வந்து" (சோழமண்டல. மேற்) கரிக்காலக்கரை (திருச்செந்துறைச்சாசனம்) இவை கரிகாலன் கரை கண்டவன் என்பதைக் காட்டும். குலோத். உலா 18. இராசரா........உலா, 17 காண்க. இவனே வடவரைமேற் புலிக்கொடி நாட்டியவன் எனவும் அம் மலையைச் செண்டு கொண்டடித்துத் திருப்பினன் எனவும் தெரிகிறது. "செண்டுகொண்டு கரிகால னொருகாலி னிமயச் சிமைய மால்வரை திரித்தருளி" (கலிங்கத். 178) எனவும், "வடவரைமேல் வாள்வேங்கை யொற்றினன்" (சிலப். 29) எனவும் வந்துள்ள இடம் அறிக. நெடுமுடிக்கிள்ளியின் பின் சிபி, சிவூகன், கரிகாலன் இவர்கள் கூறப்பட்டனர்.