பக்கம் எண் :

பக்கம் எண் :5

விக்கிரம சோழனுலா

சோழர் குலம் தோன்றிய வழிவழிமன்னர்


 

26



30
பொன்னிக் கரைகண்ட பூபதியும் - இன்னருளின்
மேதக்க பொய்கை கவிகொண்டு வில்லவனைப்
பாதத் தளைவிட்ட பார்த்திவனும் - மீதெலாம்
எண்கொண்ட தொண்ணூற்றின் மேலு மிருமூன்று
புண்கொண்ட வென்றிப் புரவலனும் - கண்கொண்ட
கோதிலாத் தேறல் குனிக்குந் திருமன்றங்
காதலாற் பொன்வேய்ந்த காவலனும் - தூதற்காப்



 

வரிகள் 26 - 32 : இன்னருளின் மேதக்க..........காவலனும்
 


 

சொற்பொருள் : இனிய கருணையுடன் மேன்மை பொருந்தி. பொய்கையார் பாடிய (களவழி நாற்பது) நூலை ஏற்றுக்கொண்டு (கணைக்காலிரும்பொறை) சேரனைக் கால் விலங்கு நீக்கிய (சிறைவிடுத்த) மன்னனும் தன் உடம்பின்மேல் எல்லாவிடத்தும் மதிக்கத்தக்க தொண்ணூற்றாறு புண் கொண்ட வெற்றியுடைய வேந்தனும், (பார்ப்பவர்) கண்களைக் கவர்ந்து கொள்ளும் குற்றமில்லாத தேன்போன்ற சிவபெருமான் நடிக்கும் சிறந்த மன்றத்துக்குத் தன் விருப்பத்தால் பொற்றகடு வேய்ந்த புரவலனும்.


விளக்கம் : சேரன் கணைக்காலிரும்பொறையைச் சிறை நீக்கி விடுத்தவன் கேர்ச்செங்கட் சோழன் எனப்படுவான் இவன் கழுமலம் என்னும் ஊரில் சேரமான் கணைக்காலிரும் பொறையோடு போர்புரிந்து வென்று அவனைச் சிறைப்படுத்தினன். இதனை யறிந்து அச் சேரமான் அவைக்களப் புலவராகிய பொய்கையார் களவழி நாற்பது என்னும் நூல் பாடி அரங்கேற்றினர். அதனைக் கேட்ட கோச்செங்கணான் மனமகிழ்ந்து பொறையனைச் சிறைவீடு செய்தனன் என்பது வரலாறு.

    "அணங்கு படுத்தும் பொறையனைப் பொய்கைக்குப் பண்டு, கொடுத்துக் களவழிப் பாக்கொண்டோன்" (குலோத். உலா 38) எனவும், "நல்லவன் பொய்கை களவழி நாற்பதுக்கு, வில்லவன் காற்றளையை விட்டகோன்" (இராசரா. உலா35) எனவும் கூறுவர் ஆசிரியர். "சோழன் செங்கணானும் சேரன் கணைக்காலிரும் பொறையும் தமது திருப்பெயர் பொறித்துப் பொருதுழிச் சேரமான் கணைக்காலிரும்பொறையைப்பற்றிச் சோழன் செங்கணான் சிறைவைத்துழிக் களம் பாடிப் பொய்கையார் வீடு கொண்டமையான் என்க" (களவழி நாற்பது, முன்னுரை) என்றதனாலும், புறநானூற்றின் 74 ஆம் அடிக் குறிப்பாலும் இவன் வரலாறு புலப்படுகிறது.

    எண்கொண்ட புண் தொண்ணூற்றின்மேலு மிருமூன்று புண் எனக் கூட்டுக. மதிக்கத்தக்க புண் அவை தொண்ணூற்றாறு உடம்பின்மேல் இருந்தன என்று கொள்க. மதிக்கத்தக்க புண் - விழுப்புண். "விழுப்புண் படாத" என்ற குறட்குப் பரிமேலழகர் "முகத்தினும் மார்பினும் பட்ட புண் விழுப்புண்" எனக் கூறியது காண்க. அவ்வாறு முன்புறம் பட்ட புண்கள் தொண்ணூற்றாறு கொண்டவன் எனவே சிறந்த வெற்றி வீரன் என்பது கூறாமலே விளங்கும். இச் சிறப்புப் பெற்றவன் விசயாலயன் என்று கூறுவர். அவனே பலபோர்களில் எதிர்த்து நின்று பகைவர்களை யடக்கி வீரவாழ்க்கை
வாழ்ந்தவன். பழைய வுரைக்குறிப்பு இவன் இராசாதேவன் என்று குறிக்கிறது. இவன் பெயர்பெற்ற வீரன். "சீறுஞ் செருவிற் றிருமார்பிற் றொண்ணூறும், ஆறும்படு தழும்பி னாகத்தான்" (குலோத். உலா, 21) எனவும், "தொழும்புடைய வாகத்துத் தொண்ணூறு மாறும், தழும்புடைய சண்டப்ர சண்டன்" இராச, உலா, 19) எனவுங் கூறுகின்றார் இவர்.

    தேறல் - தேன். "குனிக்குந் திருமன்றம்" என்ற குறிப்பினால் தேறல் உவமையாகும் பெயராய்ச் சிவபெருமானை யுணர்த்திற்று. அடியார் மும்மலப் பிணியை நீக்குவதால் தேன் எனக் கூறினர். "கண்ட கண்கள் மற்றொன்றினைக் காணவே" என்று கூறியதுபோல, சிவனைக் கண்ட கண்கள் வேறு பொருளைக் காண விரும்பா ஆதலின் கண்கொண்ட தேறல் என்றார். கண் கொண்ட மன்றம் எனக் கூட்டினும் பொருந்தும். சிற்றம்பலம் பொன்வேய்ந்த சோழன் முதற் பாராந்தகன். நம்பியாண்டார் திருத்தொண்டர் திருவந்தாதியில் "சிற்றம்பலம் முகடு, கொங்கிற் கனக மணிந்தவா தித்தன் குலமுதலோர்" (65) என்று கூறுவதால் ஆதித்தன் எனவும் கொள்ளலாம் கரிகாலனுக்குப் பின் செங்கணானும் விசயாலயனும், முதற்பராந்தகனும் அல்லது ஆதித்தனும் கூறப்பட்டனர்.