வரிகள் 32 - 40 : தூதற்காப் பண்டு..............கொண்டோனும் சொற்பொருள் : (தான் ஏவிய) தூதனை இழிவாகக் கூறிய காரணத்தால் முற்காலத்தில் (போர்க்குப் புறப்பட்டு) ஒருநாட் பகலிலே பதினெட்டுப் பாலைவனங்களையும் கடந்து (சேரனுடைய) மலைநாட்டை வென்று கைப்பற்றியவனும், தன் சேனைகளை ஏவிக் கங்கை யாற்றையும் கடாரம் என்னும் நாட்டையும் கைப்பற்றி வந்து அரியணைமேல் அமர்ந்த சோழனும் வங்க நாடு முழுவதையும் பகையின்றி யொடுக்கி மூன்று முறை போர்க்குச் சென்று கல்யாணபுரத்தை யழித்த ஒப்பற்ற ஆண்மையுடைய வீரனும், பகைவரைக் கோபத்தாற் போர்க்களத்திற் சென்று தன் பட்டத்து யானை யொன்றினால் கொப்பம் என்ற இடத்தில் ஆயிரம் யானைகளையும் வென்று கொண்டவனும். விளக்கம் : மலைநாடு கொண்டோன் முதல் இராசராசன். இவன் அனுப்பிய தூதனைச் சேரமன்னன் மேலாடையைக் களையும்படி கூறிச் சிறைசெய்தான். அதுகேட்டு ஒருநாட் பகலில் பதினெட்டுப் பாலைவனங்களைக் கடந்து சேரனை வென்று மலைநாட்டைக் கைப்பற்றித் தூதனையும் மீட்டு வந்தான் என்பது வரலாறு. (குலோத். உலா 24) இராசராச. உலா. 21; இவ் வரலாறு காண்க. சுரம் - குறும்பு எனவும் பொருள் கொள்ளலாம். கங்கையும் கடாரமுங் கொண்ட செம்பியன், இராசேந்திர சோழன் ஆவன். இவன் கங்கைகொண்ட சோழன் எனவும் கூறப்படுவன். கல்யாணி செற்ற தனியாண்மைச் சேவகன், இராசாதிராசன். வங்கத்தை முற்றும் - காந்தளூர்ச்சாலை என்னும் இடத்திருந்த கப்பற்படை முழுவதையும். வங்கதேச முழுவதையும் என்றும் பொருள் கூறலாம். கல்யாணி - கல்யாணம் என்ற நகர். அது சாளுக்கிய அரசர்க்குரிய தலைநகரம். அந் நகரத்தை யழித்துச் சாளுக்கியரை வென்று கைப்பற்றிய வீரத்தைக் "கல்யாணி செற்ற தனியாண்மை" என்றார். "காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி" என்று கீர்த்தியகவலிற் குறிக்கப்படுகின்றது. வெப்பம் - கோபம். பற்றலரை வெப்பத்து அடுகளத்துக் கொப்பத்து ஒருகளிற்றால் வேழங்கள் ஆயிரமுங்கொண்டோன் எனக் கூட்டுக. கொப்பம் என்பது ஓர் ஊர். இது கிருஷ்ணா நதிக்கரையில் உள்ள ஒரு தீர்த்தம் என்றும், ‘கித்ராபூர்' என்று இக்காலம் பேர் வழங்கும் ஊராயிருக்கலாம் என்றும் ஆராய்ச்சியாளர் கருதுவர். யானையாயிரம் கொப்பத்தில் வென்றவன் இராசேந்திரன் II ஆவன். பராந்தகனுக்குப் பின் முதல் இராசராசனும் இராசேந்திரசோழனும் இராசாதிராசனும் II இராசேந்திரசோழனும் முறையே கூறப்பட்டனர் என அறிக. |