வரிகள் 40 - 46 : அப்பழ நூல் பாடரவத்..............புரந்ததற்பின் சொற்பொருள் : அந்தப் பழைமையான நூல்கள் பாடப்படும் ஒலி நிறைந்த அழகிய அரங்கம் என்ற திருநகரில் வீற்றிருக்கும் திருமாலுக்கும் பலவகைப்பட்ட மணிகளால் பாம்புப்படுக்கையமைத்துத் தந்தவனும், தான் ஏற்றுக்கொள்ளும் பரணி நூலின் பொருட்டுப் போர்செய்து கூடல் சங்கமம் என்னும் இடத்தில் அளவற்ற யானைகளை வெட்டிக் கொன்றவனும், அவனுக்குப் பின் அரசுபுரிந்து இவ்வுலகத்தைக் காத்தவனும் என்ற இவர்கள் இப்பூமி வட்டத்தை முழுவதும் அரசுபுரிந்தபின். விளக்கம் : பாடு அரவம் - அடியார்கள் பழைமையான நூல்களைப் பாடித் துதிக்கின்ற ஒலி. அவ்வொலியையுடைய தென்னரங்கம் என அத்தலத்தின் சிறப்புக் கூறினர். பன்மணி என்றது நவமணிகளை. அவற்றைப் பதித்துப் பாயலமைத்தனன் எனக் காண்க. ஆடரவம் என்பதில் ஆடு என்பது படத்தையுடைய பெரும்பாம்பு என்பதை யுணர்த்திநின்றது. தென்னரங்கத்தில் திருமாலுக்குப் பாயலமைத்த சோழன் - இராசமகேந்திரன் ஆவன். இவன் பெயர்பெற்ற (இராசமகேந்திரன் திருவீதி) திருவீதி ஒன்றும் இன்றும் உள்ளது. கொள்ளுந் தனிப்பரணி என்பது கொண்ட தனிப்பரணி என்னும் பொருளில் வந்துள்ளது. இதனால் பரணி என்ற நூல் பாடி அரங்கேற்றப்பட்டது எனவும், அதனை ஏற்றுக்கொண்டவன் இவன் எனவும் தெரிகிறது. போரில் ஆயிரம் யானையை வெட்டிக் கொன்ற வீரன் மீது பாடும் நூல் பரணி ஆதலால் அதுகுறித்து இவன் கூடலசங்கமம் என்னும் இடத்தில் ஆயிரத்திற்கு மேற்பட்ட எண்ணிறந்த யானைகளைத் துணித்தான் என்னுங் கருத்துத்தோன்ற, "கொள்ளுந் தனிப்பரணிக்கு.........துணித்தோனும்" என்றார் இவன் பெயர் வீரராசேந்திரன். பரணி கொண்ட வரலாறு "பாடவரிய பரணி பகடொன்றின் கூடல சங்கமத்துக் கொண்டகோன்" (இராசராச. உலா 25) என்று கூறுவதாலும் வலியுறுகின்றது. பரணி நூல் இருப்பதாகத் தெரிந்திலது. அழிந்ததுபோலும். அவனுக்குப்பின் அவனி காத்தோன் அதிராசேந்திரன் எனத் தெரிகிறது. இவன் ஆட்சி நீட்சியின்மையாலும் அதில் அருஞ்செயல் ஒன்றும் புரிந்திலனாதலாலும் இவனைப் புகழாது "அவனி காத்தோனும்" என்ற அளவில் நிறுத்தினர் ஆசிரியர் எனக் காண்க. |