வரிகள் 46 - 55 : மேவலர்தம் சோலைத்..........விக்கிரமசோழன் சொற்பொருள் : பகைவர் (பாண்டியர் சேரர்) உடைய மீன் கொடியைத் தொலைத்து, விற்கொடியையும் நீக்கி இரண்டு முறை சென்று காந்தளூர்ச்சாலைக் கலமறுத்து வென்ற சேனையுடையவனும், மேல்கடலைத் தனக்கு உரிமையாக்கிக்கொண்டு கொங்கண நாடும் கன்னட நாடும் கைக்கொண்டு வலிமை பொருந்திய மராட்டியர் அரசனைக் கொன்று (அவன் நாட்டையும் பற்றி) இமயமலையே தன் (அரசுக்குரிய) எல்லையாகக் கண்டு முன்னர் (தன் நாட்டிலுள்ள) கொடிய வறுமையையும் சுங்கைத்தையும் நீக்கி அறத்தை வளர்க்கும் ஆணைச் சக்கரம் கடல் சூழ்ந்த பூமியை வலமாகச் சுற்றிவரக் காப்பாற்றிய ஆத்திமாலையாற் பொலிந்த புயத்தையுடைய அபயனுக்கு உலகமெல்லாம் விளங்கும்படி தோன்றிய அரசன் ஆகிய விக்கிரமசோழன். விளக்கம் : அபயன் - முதற் குலோத்துங்கன். அவன் மகன் விக்கிரமசோழன். முதற் குலோத்துங்கன் சிறப்புக் கூறி அத்தகைய சிறப்புடைய அபயற்குத் தோன்றிய கோன் விக்கிரமசோழன் எனச் சிறப்பித்தார். சேல் - மீன். சிலை - வில். இவை முறையே பாண்டியன் சேரன் இவர்கட்கு உரிய கொடிகள் இக்கொடிகளை நீக்கினன் எனவே சேரர் பாண்டியரைத் தனக்கு அடங்கி அரசுபுரியச் செய்தனன் என்பது தோன்றிற்று. காந்தளூர்ச்சாலைக் கலமறுத்தது, மேலைக்கடல் கொண்டது, கொங்கணம் கன்னடம்கொண்டது, மராட்டரசைக் கொன்றது, வட வரையை எல்லையாக்கியது, மறக்கலியும் சுங்கமும் மாற்றியது, அறத்திகிரி வலமாக அரசுபுரிந்தது ஆகிய செயல்களனைத்தும் முதற்குலோத்துங்கன் புரிந்தவை எனக் காண்க. காந்தளூர்ச்சாலை என்பது திருவனந்தபுரத்தைச்சார்ந்த ஒரு துறைமுகம். "காந்தளூர்ச்சாலை கலமறுத்தருளி" என்ற மெய்க்கீர்த்தியும் இதனை வலியுறுத்தும். "பஞ்சவர் ஐவரும் பொருத போர்க் களத்தஞ்சி வெரிநளித்தோடி " எனவும், "மீனவர் நிலைகெட வல்லவர் குலைதர" எனவும், அக்கீர்த்தி யகவலின் வருவதால் சேரர் பாண்டியரைச் செருக்கொழிய அடக்கினன் என்பது உறுதியாம். "விட்ட தண்டினின் மீனவ ரைவரும், கெட்ட கேட்டினைக் கேட்டிலை போலும்நீ" எனவும், "போரின் மேற்றண்டெடுக்கப் புறக்கிடுஞ், சேரர்வார்த்தை செவிப்பட்ட தில்லையோ" எனவும், "வேலை கொண்டு விழிஞ மழித்ததுஞ் சாலை கொண்டதுந் தண்டுகொண்டே யன்றோ" எனவும் கலிங்கத். 381 - 383 தாழிசைகளாலும் அறியலாம். எங்கராயன் என்னும் படைத் தலைவன் கலிங்கமன்னனுக்கு முதற்குலோத்துங்கன் வீரத்தை யெடுத்துக் கூறும் கூற்று இவை. கொங்கணம் வடகன்னடம். இது கொண்கானம் எனச் சங்க நூல்களிற் காணப்படுகிறது. சுங்கந்தவிர்த்த குலோத்துங்க சோழதேவன் என்பதும் இவன் பெயர். சுற்றி வருவதை வலமாக வருதல் என்பர். இவ்வாறு கூறுவது மரபு. "வலமுறை வருதலு முண்டென்று" (புறநா. 31) எனவும், "எழுபார்வலம்வந்த மனுகுல சோழனை" (வி. பா. 17 ஆம் போர்ச். 66) எனவும், வருவன காண்க. அபயற்குத் தோன்றிய கோன் எனவும், "பார்விளங்கத் தோன்றியகோன்" எனவும் கூட்டுக. இவன் தோன்றியதால் பாரில் பசியும் பிணியும் நீங்கி வசியும் வளனும் பெருகி மக்கள் யாவரும் விளங்கினர் என்பது கருத்து. விக்கிரமசோழன் என்பவன் பாட்டுடைத் தலைவன். இனி வருவது அவன் சிறப்பு என அறிக. |