பக்கம் எண் :

பக்கம் எண் :9

விக்கிரம சோழனுலா

விக்கிரமசோழன் பிறப்பும் சிறப்பும்
 


 

55






62
தோன்றிய விக்கிரம சோழன் றொடைத்தும்பை
மூன்று முரசு முகின்முழங்க - நோன்றலைய
மும்மைப் புவனம் புரக்க முடிகவித்துச்
செம்மைத் தனிக்கோல் திசையளப்ப - வெம்மை
விடவுட் படுத்து விழுக்கவிகை யெட்டுக்
கடவுட் களிறுங் கவிப்பச் - சுடர்சேர்
இணைத்தார் மகுடம் இறக்கி அரசர்
துணைத்தாள் அபிடேகஞ் சூடப் - பணைத்தேறு




 

வரிகள் 55 - 62 : தொடைத்தும்பை.............அபிடேகஞ்சூட
 

சொற்பொருள் : தும்பை மாலை சூடிய முரசு மூன்று மேகம் போல முழங்கவும், வலிய இடத்தையுடைய மூன்று உலகங்களையும் புரப்பதற்காக முடியைக் கவித்து ஒப்பற்ற செங்கோல் சென்று எட்டுத்திசையையும் அளந்துவரவும், சிறப்புற்ற குடையானது எட்டுத்திசைத் தெய்வயானைகளையும் உள்ளே விடுத்து உட்படும்படி கவிந்து நிழல்செய்யவும், ஒளிபொருந்திய இரண்டு மாலைகளையும் முடியையும் எடுத்துவிட்டு வேற்றரசர் யாவரும் இரண்டு பாதங்களையும் தமக்கு முடிகளாகச் சூடவும்.

விளக்கம் : தொடைத்தும்பை என்பதைத் தும்பைத்தொடையென மாற்றுக. போர்க்குச்செல்வோர் சூடுவது தும்பைமாலை. முரசுக்கு மாலை சூட்டுவது இயல்பு. போர் முரசுக்குரிய தும்பை மாலையை மூன்று முரசுக்கும் புனைவர் எனவும் தெரிகிறது. படை, கொடை, மணம் குறித்து முழங்குவதால் மூன்றுமுரசு என்றார். மணமுரசினை விடுத்து நீதிமுரசு கூட்டி மூன்றென்றுங் கூறுவர் சிலர். ‘மும்மைப் புவனம்' என்பது தமிழ் நாட்டின் மூன்று பகுதியை யுணர்த்தும். பெருமைக்காக முடிகவித்தானலன் புரப்பதற்கறிகுறியாக முடிகவித்தான் என்பது தோன்ற ‘புவனம் புரக்க முடிகவித்து' என்றார். அவன் செங்கோல் செல்லாத விடமில்லை இவ்வுலகத்தில் என்ற கருத்துத்தோன்ற, ‘திசையளப்ப' என்றார். விழுக்கவிகை எட்டுக்கடவுட் களிறு தம்மைவிட உட்படுத்து கவிப்ப எனக்கூட்டுக. (சிறந்த வெண்குடையானது எட்டுத்திசை யானைகளுக்கு அப்பாலும் சென்று நிழல் செய்தது) யானைகளையும் உட்படுத்தியது. அவற்றிற்கும் இக் குடையே காவலாக நின்றது என்றார். மக்கட்குக் காவலாக நிழல் செய்ததும் அன்றித் திசையானைகட்குக் காவலாகவும் இருந்தது என்பது கருத்து. அரசர் இயற்கை மாலையும் அடையாளப் பூமாலையும் அணிவார் என்பது தோன்ற இணைத்தார் என்றார். மணத்திற்காகப் புனைவது இயற்கைமாலை. தன்னைப் பிறர் இன்னான் என அறிவதற்காகப் புனைவது அடையாளப் பூமாலை. சிற்றரசர் பேரரசரைக் காணச் செல்லும்போது முடியையும் மாலையையும் எடுத்துவைத்து விட்டுச் செல்வது முறைபோலும். அதுகுறித்து, "தார்மகுடமிறக்கி" என்றார். இணைதார் என்பது இணைத்தார் எனச் செய்யுள் நோக்கி விரிந்து நின்றது எனக் கொண்டு, ‘இணைந்த தாரையுடைய முடியை எனக் கொள்ளினும் பொருந்தும் : முடிமேற் றார் புனைவது இயற்கையாதலின். அபிடேகம் - கிரீடம்; முடி. வேற்றரசர் தம் முடியை இறக்கிவந்து துணைத்தாள்களை முடியாகத் தமது தலையிற் சூடினர் என்று நயம்படக் கூறினர்.