பக்கம் எண் :

பக்கம் எண் :10

விக்கிரம சோழனுலா

விக்கிரமசோழன் பிறப்பும் சிறப்பும்
 


 

62







70
துணைத்தாள் அபிடேகஞ் சூடப் - பணைத்தேறு
நீராழி யேழும் நிலவாழி யேழுந்தன்
போராழி யொன்றாற் பொதுநீக்கிச் - சீராழி
மேய திகிரி விரிமே கலையல்குல்
தூய நிலமடந்தை தோள்களினும் - சாயலின்
ஓது முலகங்க ளேழுந் தனித்துடைய
கோதில் குலமங்கை கொங்கையினும் - போதின்
நிறைகின்ற செல்வி நெடுங்கண் களினும்
உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்கால்




 

வரிகள் 62 - 70 : பணைத்து ஏறு நீராழி........நாளில் ஒருநாள்

 

சொற்பொருள் : பெருகி மேலெழுகின்ற நீர் நிறைந்த ஏழு கடல்களும் நிலத்தில் உள்ள ஏழுதீவுகளும் தன்னுடைய போர்க்குரிய சக்கரத்தால் வென்று (யாவர்க்கும் பூமி) பொதுவென்று சொல்வதை நீக்கி (தனக்கே யுரியதாக்கி) சிறந்த புறக்கடலும் சக்கரவாளகிரியும் மேகலையும் அல்குலுமாகக் கொண்ட பூமாது தன்னிரண்டு தோளினும், சொல்லும் அழகுடைய ஏழுலகங்களும் தனியாகக்கொண்ட குற்றமில்லாத தன் பட்டத்துத் தேவியின் கொங்கையினும், மலரில் வாழும் செல்வியாகிய திருமகள் நீண்ட கண்களினும் தங்கியிருக்க அரசு புரியும் நாள்களில் ஒருநாள்.

விளக்கம் : முழங்க (56), அளப்ப (58), கவிப்ப (60) சூட (62) என்ற செயவெனெச்சங்களைப் பொதுநீக்கி என்ற வினையெச்சத்துடன் கூட்டி உறைகின்ற பெயரெச்சத்துடன் அதனைக் கூட்டி முடிவு செய்க. கடல்நீர் ஒருகாலத்திற் பெருகி மேலெழுந்து வரும் இயல்புகுறித்து ‘பணைத்து ஏறு நீராழி, என்றார் நிலவாழி என்பது (நிலத்திலுள்ள மண்டலம் எனப்பொருள் படும்.) இது வட்டம் வட்டவாகச் சூழ்ந்திருக்கும் தீவுகளைக்குறித்தது. இறலி, குசை, கிரவுஞ்சம், சம்பு, புட்கரம், கழுகு, தெங்கு என்பனபெயர்.) மற்றையரசர் கட்கும் உரிமையுடையது இப்பூமி என்று நினைக்க இடமின்றித் தனக்கே யுரிமையுடையதாகக்கொண்டு அரசு புரிந்தான் என்ற கருத்து வெளிப்படப் பொது நீக்கி என்றார்.  நிலமடந்தைக்குப் புறக்கடல் மேகலையாகவும் சக்கரவாளமலை அல்குலாகவும் கூறப்பட்டது மிகவும் பொருத்தமான உருவகம். சக்கரவாளத்தைச் சூழ்ந்திருப்பது புறக்கடலாதலால், வேந்தர்கள் பூமியைத் தாங்குவது தோளில் எனக்கூறும் மரபுபற்றி, ‘நிலமடந்தை தோள்களினும்' என்றார். ‘உலகங்களேழுந் தனித்துடைய கோதில் குலமங்கை' என்றது விக்கிரமசோழன் பட்டத்துத் தேவியை. இந் நூலில் 78, 80 கண்ணிகளில் ‘உலகமேழுடைய பெண்ணணங்கு பெண்சக்கரவர்த்தி' என்று குறிப்பதும் அத் தேவியையே சுட்டும். எனவே, தேவியின் பெயர் ‘ஏழுலகுடையாள்' என இருத்தல் வேண்டும். முக்கோக்கிழானடிகள் பட்டத்துத்தேவி என்றும், இவ்வுலாப் பாடுங்காலத்தில் அவள் மறைந்து இரண்டாம் மனைவியாகிய தியாகபதாகையே இருக்கவேண்டும் அக்காலத்தில் என்றும், அவளையே இப் பெயராற் கூறினர் என்றும் டாக்டர் உ. வே. சாமிநாதையர் அவர்கள் குறிப்பு வரைந்துள்ளார். ஆய்ந்து உண்மை காண்க. பூமாது, தேவியின் கொங்கையினும் தங்கினள் எனக் கொள்க. மன்னனும் மன்னன் தேவியும் ஒருங்கிருந்து அரசு புரிவதைக் குறித்தது அது. திருமகளும் அவ்விருவர்கண்களினும் தங்கினள் எனக் கொள்க. "எங்கோன் கண்ணிற் குடியாய்க் கலந்திருந்தாள்" எனப் பிறரும் கூறுதல் காண்க. 56 முதல் 70 கண்ணிகள் வரை விக்கிரமசோழன் அரசாட்சிச் சிறப்புக் கூறினர். அங்ஙனம் அரசுபுரியும் நாளில் ஒருநாள் "கடாக் களிற்றுப் போந்தான் கொடைச்சென்னி உத்துங்க துங்கனுலா" (648) என வினை முடிவு செய்க. இனி உலா வருஞ்சிறப்புக் கூறப்படும்.