பக்கம் எண் :

பக்கம் எண் :11

விக்கிரம சோழனுலா

துயில் எழுதல்
 


 

70









80
உறைகின்ற நாளி லொருநாள் - அறைகழற்கால்
தென்னர் திறையளந்த முத்திற் சிலபூண்டு
தென்னர் மலையாரச் சேறணிந்து - தென்னர்
வரவிட்ட தென்றல் அடிவருட வாட்கண்
பொரவிட்ட பேராயம் போற்ற - விரவிட்ட
நித்திலப் பந்தர்க்கீழ் நீணிலாப் பாயன்மேல்
தொத்தலர் மாலைத் துணைத்தோளும் - மைத்தடங்
கண்ணு முலையும் பெரிய களியன்னம்
எண்ணு முலகங்க ளேழுடைய பெண்ணணங்கு
பெய்த மலரோதிப் பெண்சக்ர வர்த்தியுடன்
எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத




 

வரிகள் 70 - 80 : அறைகழற்கால் தென்னர்.........யினிதெழுந்து

 

சொற்பொருள் : ஒலிக்கின்ற வீரக்கழல் புனைந்த பாண்டியர் திறையாகத் தனக்கு அளந்து தந்த முத்துக்களிற் சிலவற்றைப் பூண்டு, அப்பாண்டியர்க்குரிய பொதியமலை தந்த சந்தனக் குழம்பையும் பூசி, அவர் மலையிலிருந்து வரவிட்ட தென்றற் காற்றானது பாதங்களை வருடவும், வாள்போன்ற கண்களைப் போர் செய்யும்படி விட்டிருக்கும் பெருமையுடைய மகளிர் கூட்டம் அருகிருந்து போற்றவும், கலந்த முத்துப்பந்தரின் நீளமான வெண்ணிலாப்போன்ற பாயலின்மீது, பூங்கொத்துக்கள் மலர்ந்த மாலையணிந்த இரு தோள்களும், மையணிந்த அகன்ற விழிகளும் கொங்கையும் பருத்திருக்கின்ற செருக்குடைய அன்னப்பறவைபோன்ற மதிக்கப்படும் உலகங்கள் ஏழுடைய பெண்ணணங்கு ஆகிய மலர்பெய்த கூந்தலையுடைய பெண் சக்கரவர்த்தியுடன் கூடித்துயின்ற துயினீங்கி இனிமையாக எழுந்து.

விளக்கம் : தென்னர் - தென்னாடுடையவர். இவர் பாண்டியர். அவர் நாட்டின் மிகுதியாகக் கிடைக்கும் பொருள் முத்து ஆதலால் அவற்றை யளந்து திறையாகத் தருவர் என்பது தோன்ற, "திறையளந்த முத்து" என்றார். சந்தனமும் அவர் மலையினின்று வரும் பொருள், முத்தும் சந்தனமும் பாண்டியர்க்குரிய பொருள் என்பதை, "பூழியர்கோன் தென்னாடு முத்துடைத்து" எனவும், "தன்கடற் பிறந்த முத்தினாரமும், முனைதிறை கொடுக்கும் துப்பிற் றன்மலைத், தெறலரு மரபிற் கடவுட் பேணிக், குறவர் தந்த சந்தி னாரமும், இருபே ராரமும் எழில் பெற வணியும்" (அகநா. 13) எனவும், "கோவா மலையாரம் கோத்த கடலாரம், தேவர்கோன் பூணாரம் தென்னர்கோன் மார்பினவே" (சிலப். 17, உள்வரி வாழ்த்து) எனவும் கூறியவை விளக்கும். தென்றல் தெற்குத் திசையிலிருந்து வருவதால் "தென்னர் வரவிட்ட தென்றல்" என்றார். மன்னனும் மன்னன் தேவியும் இருக்கும் இடத்துநிற்கும் மகளிர் ஒவ்வொருவரும் தம்மை எப்போது எவ்வினை செய்ய அழைப்பாரோ என எண்ணிக் கண்கள் இமையாது நோக்கியிருப்பது இயற்கையாதலால் "வாட்கண் பொரவிட்ட பேராயம்" என்றார். வெள்ளைத் துகில் பாயலின்மேல் விரித்திருப்பதால், ‘நிலாப்பாயல்' என்றார். நிலாப்போன்ற பாயல் என விரிக்க. தோளும் கண்ணும் அல்குலும் கொங்கையும் பருத்திருத்தல் மங்கையர்க்குரிய இலக்கண மாதலாற் ‘பெரிய களியன்னம்' என்றார். "அகலல்குல் தோள் கண்ணென மூவழிப் பெருகி" (கலித். 108) எனவும், "பெயறுளி முகிழெனப் பெருத்தநின் னிளமுலை" (கலித். 56) எனவும் வருவன காண்க. பூண்டு : அணிந்து, வருட, போற்ற, பாயலின் மேல், பெண் சக்கரவர்த்தியுடன் (துயின்ற) துயில் எனக் கூட்டுக. முத்துமாலை புனைவதும், சந்தனம் பூசுவதும், தென்றல் வருமாறு செய்வதும் காமவின்ப நலம் கருதிய செயல் எனக் காண்க.