பக்கம் எண் :

பக்கம் எண் :12

விக்கிரம சோழனுலா

கடவுள் வணக்கம்
 


 

80





86
 
எய்திய பள்ளி யினிதெழுந்து - பொய்யாத
பொன்னிப் புதுமஞ் சனமாடிப் பூசுரர்கைக்
கன்னித் தளிரறுகின் காப்பணிந்து - முன்னை
மறைக்கொழுந்தை வெள்ளி மலைக்கொழுந்தை மௌலிப்
பிறைக்கொழுந்தை வைத்த பிரானைக் - கறைக்களத்துச்
செக்கர்ப் பனிவிசும்பைத் தெய்வத் தனிச்சுடரை
முக்கட் கனியை முடிவணங்கி - மிக்குயர்ந்த




 

வரிகள் 80 - 86 : பொய்யாத பொன்னித்...........முடிவணங்கி
 

சொற்பொருள் : எக்காலத்தும் நீர்வற்றாத காவிரியாற்று நீரின் முழுகி மறையோர் கரத்தாலளித்த இளமையான தளிர்த்த அறுகம்புற் காப்பை யணிந்து பழைமையான வேதங்களின் கொழுந்தும், வெள்ளிமலைக் கொழுந்தும் சடையிற் பிறைக் கொழுந்தை வைத்த பெருமானும், நீலகண்டமுடைய குளிர்ந்த செவ்வானமும் தெய்வத்தின் ஒப்பற்ற ஒளியும் மூன்று கண்களையுடைய கனியும் ஆகிய சிவபெருமானைத் தலையால் வணங்கி.

விளக்கம் : வான் பொய்ப்பினும் தான் பொய்யாக் காவிரி மலைத்தலைய கடற்காவிரி (பட்டினப். 5) எனவும், ‘தவா நீர்க்காவிரிப்பாவை' (மணிமே. 3, 55) எனவும் காவிரியைச் சிறப்பித்ததுபோல இவரும் "பொய்யாத பொன்னி" என்றார். மழை பொய்யாத காலத்திலும் நீர் வற்றாமல் ஓடும் என்பது கருத்து. திருமஞ்சனம் ஆடி - சிறந்த நீரிற் குளித்து. அறுகம்புல் மங்கலப் பொருள், காப்புப்பொருள். இக்காலத்தும் பிள்ளையார் பிடித்து வைத்து அதன்மேல் அறுகம்புல் அழுத்திவைப்பதைக் காணலாம். பூசுரர் - மறையோர். அவர் கரத்தால் அறுகம்புற் காப்பணியப் பெற்றனர் எனக் கொள்க. இன்னகாலத்தில் தோன்றியது என அறியப்படாததால் ‘முன்னை மறைக்கொழுந்து' என்றார். வெள்ளிமலை - கைலைமலை. அதன் உச்சியிற் சிவன் உறைவதாக நூல்கள் கூறுவதால் ‘வெள்ளிமலைக் கொழுந்து' என்றார். மோலி - சடைமுடி. கறை - நஞ்சு. களம் - கழுத்து. நஞ்சின் கறுப்புத் தோன்றுவதால் ‘கறைக்களம்' என்றார். விசும்பு - வானம். பனி - குளிர்ச்சி. செக்கர் - சிவப்பு சிவந்த குளிர்ந்த வானம் என்க. கறைக்களத்தையுடைய........சிவந்த குளிர்ந்த வானம் எனவே குறிப்பாற் சிவபெருமானை யுணர்த்தியது. சுடர் - ஒளி. தனி - ஒப்பில்லாதது. தெய்வத்தன்மையுடைய ஒப்பில்லாத ஒளி எனவே இறைவனை யுணர்த்தியது. "வானாகி வளியாகி மண்ணாகி ஒளியாகி" இறைவன் நிற்பதால் விசும்பு என்றும், சுடர் என்றும் கூறினர். கனி மக்கட்கு இனிய சுலைப்பொருளாய் இன்பத்தைத் தரும். அதுபோல இறைவன் இன்பத்தை யளிப்பதுகுறித்துக் ‘கனி' என்றார். சிவன் என்பது தோன்ற ‘முக்கட்கனி என்றார். வணங்கும் உறுப்புக்களுட்டலை சிறந்தது தலையாதலால் ‘முடிவணங்கி' என்றார். "தலையே நீ வணங்காய்" என்ற நாவுக்கரசர் திருமொழியும் உணர்க. உலகத்திற் பிறந்த மக்கள் அனைவரும் துயில் நீங்கி யெழுந்தவுடன் நீராடி உடலைத் தூய்மை செய்து பின்னர் உள்ளந் தூய்மையாவதற்கு இறைவனை வணங்க வேண்டும். இதுவே காலைக்கடன் என நூல்கள் கூறுவதால் இம் மன்னனும் அக்கடனாற்றினன் எனக் கொள்க.