வரிகள் 86 - 100 : மிக்குயர்ந்த தானத்துறை...........வனப்பமைந்து சொற்பொருள் : மிகவும் உயர்ந்த தானத்தின் வகைகளைச் செய்து முடித்து அணிந்துகொள்ளுந் தகுதியுடைய பெருமையான அணிகலங்கள் ஏவலரைக் கொண்டுவரப் பணித்து (அவற்றில்) வண்டுகள் மொய்த்துச் சுற்றுந் தாமரை மலர் போன்ற முகத்தில் கலைமகளுடனே தாழ்ந்த மகரக்குழை விளங்கவும் வாழ்கின்ற பருத்த கொங்கைகளையுடைய பூமியாகிய மங்கையுடன் புயத்தில் ஒளியுடைய மணிகள் பதித்த வாகு வலயம் சூழ்ந்து வயங்கவும், பரந்த குறைவில்லாத பெருமையான புகழ் மடந்தையுடனே மணிகள் பதித்த கடகம் கரத்தில் விளங்கவும், ஆசையால் கூடியிருக்கும் திருமகளுடனே திருப்பாற்கடல் முன் கொடுத்த விளங்கு மணியாகிய கவுத்துவம் மார்பில் தங்கவும், வருந்தாமல் அரிய வெற்றியை யளிக்கும் வீரமங்கையாகிய துர்க்கையோடு இடையிற் சிறந்த உடைவாள் பொருந்தவும் (புனைந்து) பொருத்தமான பெருமையுடைய தன் வடிவத்தில் அருமை பெருமையுடைய பிற அணிகளையும் அணிந்து அளவில்லாத பலநிறங்களால் அழகு பொருந்துவித்து. விளக்கம் : தானத்துறை என்றது கொடையின் பிரிவுகளைக் குறித்தது. அன்னம், ஆடை, பொன், பூமி, பசு முதலியவற்றை உயர்ந்தோர்க்குக் கொடுப்பது தானம். இவை முறையே அன்னதானம், வஸ்திரதானம், சொர்னதானம், பூதானம், கோதானம் என வடமொழியிற் கூறப்படும். நீராடிக் கடவுட் பூசை முடிந்தபின் ஏழைகட்கு அன்ன மாடை முதலியன வழங்கினான் எனஅறிக. பின்னர்ப் பலவகையணி புனைந்து அலங்கரித்தல் கூறுகின்றார். மன்னர்க்குத்தக்க அணி மன்னர் புனைய வேண்டும் வணிகர்க்குத் தக்கவணி வணிகர் புனைய வேண்டும்; வீரர்க்குத் தக்கவணி வீரர் புனைய வேண்டும்; ஏழைக்குத் தக்கவணி ஏழையணிய வேண்டும்; செல்வர்க்குத் தக்கவணி செல்வர் புனையவேண்டும். மாறி யணிந்தால் இழித்துரைக்கப்படுவர். இஃது இயற்கையாதலால் ‘சாத்துந் தகைமையன மானக் கலன்கள்? என்றார். கலைமகள் உறையும் இடம் நாக்கு: சொல் நாவினின்று பிறப்பதால். அது முகத்தில் உள்ளது. மகரக்குழையும் முகத்தை யடுத்துத் தொங்குவது. அதுகுறித்துச் "சொன்மா மகளுடனே........குழைதயங்க" என்றார். நிலமடந்தை வாழும் இடம் தோள். தோள் வலிமையாற் பூமியைக் காப்பதால், அதனால் தோள் அணியாகிய வாகுவலயம் "அவளுடன் சூழ" என்றார். புகழ்மகள் வீற்றிருக்கும் இடம் கைகள். ஈகைக்குக் கருவியாவது கை. ஈகையாற் பிறப்பது புகழ். "ஈத லிசைபட வாழ்தல்? என்றும், "உரைப்பா ருரைப்பவை யெல்லாம், இரப்பார்க்கொன்றீவார்மே னிற்கும் புகழ்" என்றும் வள்ளுவர் கூறிய வாய்மொழியும் நோக்குக. அதனால் "கீர்த்தித் தையலுடனே மணிக்கடகம் கையில் வயங்க" என்றார். திருமகள் திருமால் மார்பில் வாழ்வது போலவே மன்னர்கள் மார்பிலும் வாழ்வதாகக் கூறுவது நூல் மரபு காக்குந் தொழிலால் மன்னரும் திருமாலும் ஒப்பாவார். "திருவுடை மன்னரைக் காணிற் றிருமாலைக் கண்டேனே" யென்னும் வாக்கும் நோக்குக. திருமால் மார்பிற் கௌத்துவ மணியும் அமைந்திருக்கும். இவ்விரண்டும் இம்மன்னன் மார்பிலும் வயங்கின என்பார், "திருவுடனே மணிமார்பின் மல்க" என்றார். கொற்றம் ஆக்கும் அணங்கு - கொற்றவை எனப் பெயருடையவள். அவளே துர்க்கை. அவள் அமர்ந்திருக்கும் இடம் மருங்கு. அவ்விடத்தில் உடைவாள் செருகப்பட்டிருப்பதால் அது வீரத்திற்குரிய இடமாயிற்று. கொற்றவையுடனே உடைவாள் சூடியிருந்தது எனக் கொள்க. தயங்க (90) சூழ (92), வயங்க (94), மல்க (96), வாய்ப்ப (98) என்ற எச்சங்களுக்கு உம்மை கூட்டிப் புனைந்து என்ற எச்சம் வருவித்து முடிக்க. அணிந்து (99) என்ற எச்சத்தை அதனுடன் சேர்க்க. அரும்பேரணி என்பது பிறவணிகளைக் குறித்ததாகக் கொள்க. அணிந்து வனப்பமைந்து, (100) கோயிற் புறநின்று (103) எனக் கூட்டுக. |