வரிகள் 100 - 103 : கண்ணுதலோன்..........கோயிற் புறநின்று சொற்பொருள் : நெற்றியிற் கண்ணுடையவரான சிவபெருமான் (தன்மேற் போர் புரிய) மன்மதன் வில்லை வளைக்க (அதனால் சினந் தெரித்து) முன் வாங்கிய அவன் கட்டழகை (இப்போது தன்னை) மாலையணிந்த முடியால் வணங்கியது குறித்துத் தந்தது போலத் தோன்றும் விரும்பத்தக்க அழகிய வடிவத்தோடும் அவணின்றும் பெயர்ந்து அரண்மனைப் புறத்தே சென்று நின்று. விளக்கம் : பலவகையான அணிகலன்கள் அணிந்து புறப்பட்டபோது காமனைப்போலக் கட்டழகுடையவனாகத் தோன்றினான். சிவபெருமானை வணங்கினன். உடனே பேரழகுடையவனாகத் தோன்றினான். அத் தோற்றம், தன்மேற் பகைகொண்டு வந்த காமன் கட்டழகை வாங்கி வைத்திருந்து தன்னைப் பணிந்த அன்பனாகிய விக்கிரம சோழனுக்குச் சிவபெருமான் கொடுத்தனன் போலும் எனக் கருதுமாறு விளங்கியது என்பது கருத்து. இது தற்குறிப்பேற்றம். இனிப் பட்டத்து யானையின் சிறப்புக் கூறுகின்றார் |