வரிகள் 104 - 112 : காலத் ததிரும்...............வெங்கால கோபம் சொற்பொருள் : தனக்குரிய காலத்திற் (போர்க்காலங்களில்) பிளிறுகின்ற மதம் பொருந்திய யானை இவ்வுலகத்தில் தானே முழங்குவதல்லாமல் தனக்கெதிராக வானமே முழங்கினாலும் அவ் வானத்தைத் தடவி அதற்குப் பட்டமும் கொம்பும் வலிய துதிக்கையும் இல்லையெனக் கண்டு சினந்தணியும் இயல்புடைய எமராசதண்டம் போன்றது அது. நீங்காத பெரிய போர்புரியும் கொம்புகளிரண்டும் வளர்ந்து பருப்பதற்கு அருமையான தானே ஒரு முதலாகி நின்று கருமையான மலைச்சிகரங்களெல்லாம் இடிந்து மடியும்படி குத்துகின்ற கொலை செய்யுங் கொம்புகளையுடைய கொடிய காலனது கோபம் போன்றது அது. விளக்கம் : போர்க்கலத்தில் பகைவர் அஞ்சுமாறு முழங்கும் என்பது தோன்ற ‘காலத்ததிரும்' என்றார். வேற்றுயானையைக் கண்டால் வெகுளி தோன்றும். அதனைக் கொல்ல முயலும். அத்தகைய மதமயக்கங்கொண்டது என்ற கருத்து விளங்க வான் முழங்கினும் அவ் வானைத் தடவிப்பார்த்து யானைக்குரிய அணி, மருப்பு, துதிக்கை இல்லாமையை யறிந்து சினந்தணியும் என்றார். உலகவழக்கிறந்த உயர்வு நவிற்சியணி. வான் - மேகம். வானில் இருப்பதால் அப்பெயர் பெற்றது. எமனாகிய மன்னன் தண்டனை எவ்வாறு மாற்றப்படாதோ அதுபோல இவ்வானையின் தண்டனையும் எவராலும் மாற்றப்படாது. கொல்லக்கருதி வந்தால் கொன்றே விடும் என்பது. இரண்டு கொம்புகளும் வளர்ந்து பருப்பதற்கு இடமாகின்றது. இந்த யானையாகிய மலை என்பது தோன்ற, ‘ஒருதானேயாகி' என்றார். மற்றை மலைக்கோடனைத்தும் இடியக் குத்துங் கொலைக்கோட்டையுடையது இது. காலன் கோபம் போன்றது என்பதற்குக் கூறிய கருத்தையே இதற்கும் பொருத்துக. |