வரிகள் 112 - 124: அலைத்தோட ஊறு..........என்றுவக்குங் காற்று சொற்பொருள் : (எல்லாப் பொருள்களையும்) இழுத்து ஓடும்படி ஊறுகின்ற மதம் இவ்வுலகத்தில் தன் மதமேயாகவென்று கருதி வேற்று யானையின் மதநாற்றத்தைப் பொறுக்காத கோபத்தால் திக்கு யானைகள் எட்டும் தமக்குரிய கூறுபொருந்தும்படி (பூமி பாரத்தைத்) தாங்கிப் பொறுக்க முடியாமல் வருந்துகின்ற அவற்றின் பிடரியினின்றும் அப் பாரத்தை வாங்கி மற்ற மன்னர்க்கும் பொது என்பதை யொழித்து (தனக்கே யுரியதாக்கி) இம் மண்ணுலக முழுவதையும் உயர்ந்த வெற்றிபொருந்திய இருபுயத்தால் மன்னனாகிய அகளங்கன் சேரத்தாங்கிய பின்னர் (அவ் யானைகள் முன்பு தாம் பட்ட வருத்த மனைத்தையும் அறவே மறந்து பருத்த வாய் மதம் வரும்வழி திறந்து பரவ, அம் மதப் பெருக்கத்திற் றோன்றிய இனிய நாற்றத்தினைக் குறித்து அவ்வழியே யோடி அவற்றின் பின்புறத்தைக் கண்டுகோபந்தணிந்து இவற்றை எம்மன்னன் ஆகிய சோழன் காப்பாற்றினான் ஆதலால் இவை இப்போது செருக்கடைந்துள்ளனவென்று கண்டு மகிழும் காற்றுப்போன்ற யானை அது. விளக்கம் : பக்கத்திலுள்ள பொருள்களை யெல்லாம் அலைத்தோடும்படி மதநீர் ஒழுக்கும் யானை என்பது தோன்ற, ‘அலைத் தோட ஊறும் மதம்' என்றார். தன்பால் ஊறும் மதநாற்றத்தையன்றி வேறுமத நாற்றம் தோன்றினால் அந்நாற்றம் வந்த வழியே சென்று அவ் யானையைக் கொன்றுவரும் கோபக்குறிப்புடையது இவ் யானை என்பது தோன்ற, ‘வேறுமதம் பொறா வேகத்தால்' என்றார். எட்டு யானைக்கும் ஒவ்வொன்றுக்கும் உரிய பங்குப்படி பூமி பாரந்தாங்கின என்ற குறிப்புத்தோன்ற "கூறொன்றத் தாங்கி" என்றும், அவ்வாறு தாங்கியும் பொறுக்க முடியாப் பாரமாயிருந்தது என்றும், அப் பாரத்தை அவற்றின் பிடரியினின்று வாங்கினான் என்றும், வாங்கித் தன் கொற்றப் புயமிரண்டில் ஏந்தித் தாங்கினான் என்றும், தாங்கிய பின்புதான் அவை வருத்தந்தீர்ந்து பருத்த மதம் பொழிந்தன என்றும் தோன்ற, "மாதிரத்து வேழம் பருத்து கடாந்திறந்துபாய' என்றார். திசை யானைகள் மதம் பொழிய அந்நாற்றத்தை யறிந்து அதன் வழியே சென்று அவற்றின்பின் புறங்கண்டு சினந்தணிந்து, நம் மன்னன் விக்கிரமசோழனால் காப்பாற்றப்பட்டுக் களித்திருக்கின்றன பாவம்! இவற்றோடுபோர்புரியலாகாது என்று கருதி மீண்டுவரும் என யானையைச் சிறப்பித்தார். வேற்று யானை மதநாற்றத்தைக் கண்டால் பொறுக்காமல் சினங்கொள்வது மதயானையின் இயல்பு என்பதைப் "பார்த்த யானையிற் பதங்களிற் படுமத நாறக், காத்தவங்குச நிமிர்ந்திடக் கால்பிடித்தோடிப், பூத்த வேழிலைப் பாலையைப் பொடிப் பொடியாகக், காத்தி ரங்களாற் றலத்தொடுந் தேய்த்ததோர் களிறு" (கம்ப. வரைக். 6) என்று கூறுவதாலும் அறியலாம். வேற்று யானையைக் காணினும் பொறாது என்பதை "நிழல்சுளி களிநல்யானை" (நைட. கலிதோன். 11) என்று கூறுவதால் அறிக. கடாக்களிறு (104) யமராசதண்டம் (108), வெங்கால கோபம் (112), உவக்குங் காற்று (124) ஆகிய அயிராபதம் (128) எனக் கூட்டுக. அயிராபதம் என்பது அரசன் பட்டத்து யானையின் பெயர். அயிராபதம் இந்திரன் யானையின் பெயரிட்டு அழைப்பது மரபுபோலும். அயிராவணம் சிவபெருமான் கயிலையில் இருக்கும் யானை. இதன் பெயரும் இட்டிருப்பதாகத் தெரிகிறது. சிந்தாமணியில் "அயிராவணத்தொடுஞ் சூளுறுமையன்' (2126) என வருவது காண்க. |