நீதிநெறி விளக்கம் என்ற இந்நூல் "உலைவிலாது யாருந் தீதெலா மொருவி நீதியே புரியப்" பயன்படுமாறு, சித்தாந்த சைவ மதத்தைச் சார்ந்த குமரகுருபர அடிகளாற் பதினேழாம் நூற்றாண்டில் இயற்றப்பட்டதாகும். மிகவும் அருமை வாய்ந்த திருக்குறள் என்னுந் தீந்தமிழ் மறையை யொட்டி, மதுரையரசர் திருமலை நாயகர் தம் விருப்பத்திற் கிணங்கச் சுருக்கமாகவும் தெளிவாகவும் இயற்றப்பட்ட இச்சிறு நீதி நூல் சு0உ வெண்பாக்களைக் கொண்டிலகுவதாகும்.

சங்கச் செய்யுட்களோடு ஒருங்குவைத் தெண்ணத் தக்க பெருமை வாய்ந்த இந்நூல் சொற் செறிவும் பொருட் செறிவுமுடையது; பத்தழகும் பண்புற அமைந்தது; சீரிய செந்தமிழ் நடையானியல்வது: வடசொற்கள் பெரிதும் கலவாதது; அணிநலம் பலவுஞ் சிறந்து மிளிர்வது; அறிவிற் சிறந்த தமிழாசிரியர்கள் பலரால் இதற்கு உரைகள் பல இயற்றப்பட்டிருப்பதும் ஆங்கிலேயரை உள்ளிட்ட அறிஞர் பலரால் இதற்கு ஆங்கில மொழி பெயர்ப்புகள் பல செய்யப்பட்டிருப்பதும் இதன் அருமை பெருமைகளுக்குச் சான்றாகும்.

இத்தகைய சிறந்த நூல், ஆசிரியர் மறைமலை அடிகளாரின் மாணவரும், நம் கழகத் தமிழ்ப் புலவராயிருந்தவருமான இளவழகனார் என்ற திருவாளர் தி.சு. பாலசுந்தரம்பிள்ளை யவர்கள் அரிதின் முயன்றெழுதிய தெளிபொருள் விளக்கவுரையுடன் நங் கழக வெளியீடாகச் செவ்விய முறையில் இப்பொழுது பதினைந்தாவது பதிப்பாக வெளிவருகின்றது. தமிழ் மக்களும் சைவ நன் மக்களும் மாணவர்களும் இதனை இன்னும் விரைந்தேற்று எம்மை ஊக்குவார்களென்று நம்புகின்றோம்.