சாமியார் நம்மைக் குலுங்கக் குலுங்கச் சிரிக்க வைக்கிறார். இப்பாடல்களுக்கு 
 வரையப்பட்டுள்ள படங்கள் அவற்றின் வேடிக்கைத் தன்மைக்கு மேலும் 
 மெருகேற்றுகின்றன. பாம்பும், மீனும் கண்மூடித் தூங்குவதில்லை; ஏன் 
 தெரியுமா? என்ற வினாவை எழுப்பி அவற்றுக்கு இமை இல்லை என்ற 
 விடையளிப்பது நயமாக உள்ளது. 
 மீன், பசு, குரங்கு இவற்றுக்கு வால்கள் ஒவ்வொரு 
 வகையில் துணை 
 செய்கின்றன என்று சொல்லி நமக்கு வாலிருந்தால் எப்படி? என்ற 
 கேள்வியைக் கவிஞர் எழுப்பியிருப்பது நயமான நகைச்சுவையாம். 
 பத்துப்பைசா பலூனை பையன் பையப் பைய ஊத அது வெடிப்பதைப் படம் 
 பிடிக்கிறது ஒருபாடல்! எதையும் ‘பைய, பைய’ என்றில்லாமல் ‘துறு, துறு’ 
 என்று துடிக்கும் குழந்தைக்குப் பையன் என்று ஏன் பெயர் வந்ததோ 
 தெரியவில்லை. 
  கவின்மிகு கதையாளர் 
 அரிய நீதிகளைக் கதைகள் மூலம் குழந்தைகட்குப் புகட்டுவது எளிது. 
 சிவாஜி வீரனானது, தாய் சொன்ன கதைகளால்தானே! நித்தம் உழைத்துப் 
 புதுமை காண வேண்டும்; பிறர்க்குதவுவதே பெருமகிழ்ச்சி; உண்மை 
 பேசுதலே உயர்வு தரும்; ஒருவர்க்கொருவர் சண்டையிட்டால் உள்ளதையும் 
 இழப்போம்; பிறரது உரிமையை மதிப்பதே சுதந்திரம் என்பன போன்ற 
 அரிய நீதிகளை எளிய கதைகள் வாயிலாகக் கவிஞர் குழந்தைகட்குப் 
 புகட்டுவது போற்றுதற்குரியது.
    |