முகப்பு
 
தொடக்கம்

அவருடைய ஒவ்வொரு நூலும் தமிழ்க்கொடை; சிந்தனைக் களங்களின்
மேடை; அவற்றில் ஒவ்வொன்றிலும் அவரது வீறுநடை! தமிழ்க்காதல்,
வள்ளுவம், கம்பர், எந்தச் சிலம்பு என்று ஒவ்வொன்றிலும் அவர்க்கே உரிய
அவரது ‘வ.சுப.’ ஆய்வு முத்திரைகள். ‘இரட்டைக் காப்பியங்கள்’ என்றால்
அவரது பதிப்புநூல். அது ஒரு ஆய்வு முன்மாதிரிப் பதிப்பு; மூல
இலக்கியத்தை ஆய்வுப்பதிப்பாகப் பதிப்பிக்கும் போது அதற்கான
‘அங்கலட்சணம்’ காட்டும் பதிப்பு, ‘தமிழ்க்காதல்’ என்றால் அவர்தம்
முனைவர் பட்ட ஆய்வோட்டகம். அக இலக்கியங்கள் குறித்த
தமிழ்ஆய்வுக்கனி; சங்க இலக்கியத்தின் காதற் சாறுகளைத் தேக்கி
வைத்திருக்கும் உயிர்நுகர் கனி!

இது காரைக்குடித் தென்னிந்திய அச்சகத்தின் முதற்பதிப்பாக 1962லும்,
பிறகு 1975லும் பதிப்பிக்கப் பெற்ற சிறப்புடைய நூல். கால்நூறு
ஆண்டுகளுக்குப் பின் ‘மெய்யப்பன் ஆய்வக வெளியீடாக’ இதனை இப்போது
பதிப்பிப்பதில் பெருமைகொள்கிறேன். ஓர் ஆசான் நூலுக்கு ஒரு மாணவனின்
வாழ்த்துப் பதிப்பாய் -வணக்கப் பதிப்பாய்த் தவம் செய்து பதிப்பிக்கிறேன்.
செம்பதிப்பு வேண்டும், செம்பதிப்பு வேண்டும், என்றவரின் மிகச்சிறந்த
ஆய்வுநூலைச் செம்பதிப்பாகப் பதிப்பிக்கும் இதனால் பெறுகிறேன்.
உள்ளூறி....உயிர்ஊறித் தித்திக்கப் பேசும் தமிழ்க்காதலை வ.சுபாவே மயங்கி
எழுதுவார்.

‘காதல் உடலுக்கு நல்லது; உள்ளத்து நல்லது; ஊருக்கு நல்லது;
உலகத்துக்கே நல்லது என்பார். உயிர்பாடும் இந்தக் காதற் பல்லவியின்
தொடர்ச்சியாகக் ‘காதல் என்பது உடற்பசி; உள்ளப்பசி; உயிர்ப்பசி;
பிறவிப்பசி என்பார். மேலும் அஃறிணை உயிர்களின் காதல் ‘கல்லாக்காமம்,
இயற்கைவீறு; மொழிபேசும் மக்களினத்தின் காதலோ நினைவில் இனித்து,
அறிவில் விளங்கிக் -கல்வியில் வளர்வது’ என்பார். இக்கல்வித் தெளிவிற்குத்
தமிழ்ப் பேரினம் கண்ட அகத்திணை நாடுக; தொல்காப்பியம்- சங்க
இலக்கியம்-திருக்குறள் என்ற முத்தமிழ் நூல்களைக் கற்க முந்துக; காதல்
சான்ற தமிழியங்களைத் தெளிக! நெறியாக-அளவாக-உரமாக-நாணமாகக்-
கற்பாகக் காமக் கூறுகளைச் செவ்வனம் காட்டும் ஓர் உலக இலக்கியம்
தமிழில்தான் உண்டு
. அதுவே அகத்திணை!’ என்று கூறித் தமிழின்
அகப்பாடல்களை ஆய்வு செய்தவர் மூதறிஞர் வ.சுப.மாணிக்கனார் ஆவார்.

மலரினும் மெல்லிது காதல்... ஆம். அகத்திணை! சிலர் அதன் செவ்வி
தலைப்படுவர். மாணிக்கனார் அத்தகு செவ்வி தலைப்பட்டவர்; இந்த நூல்
விழுமியது. வள்ளுவர்க்குப் பின், காதல் தமிழியத்தின் செவ்வி கண்ட
பேராசான் வ.சுப. என்றால் மிகை இல்லை. ஏன் எனில் அவரது தமிழ்க்காதல்
நிலத்தினும் பெரியது; வானினும் உயர்ந்தது, நீரினும் ஆரளவின்று!

“சங்க இலக்கியமும் அகத்திணையும் (காதலும்)” எனும் பொருள்மீது
ஆய்வுசெய்தார். சங்கஇலக்கியங்களை எழுத்தெண்ணி ஆய்ந்து-இந்தத்


முன்பக்கம்
அடுத்த பக்கம்