| 
	  
புத்தொளி 
 தந்த    
  
புலப்பாட்டுத்திறன் 
   
 
தமிழண்ணல் 
 
 
 சங்க அகப்பாடலை 
 விளங்கிக் கொள்ள, அப்படைப்புப் பற்றிய 
 முன்னறிவு வேண்டும். உலகக் காதற் பாடல்களில் அது தனித்துநிற்பது. அதன் 
 தனித்தன்மைகள் ஒன்று இரண்டல்ல;மிகப் பல.  
 மூவாயிரமாண்டுப் பழைமையுடைய அதனை இடைக்கால எழுச்சியில், 
 மறுவாசிப்புத் தொடங்கியவர்கள் தம் காலச் சமயத்தாக்குரவுகளுக்காட்பட்டுப் 
 பிறழவுணர்ந்தன பல. தமிழ்ப் பண்பாட்டின் வரைபடமான அகப்பாட்டு  
 மாசுபட உணரப்பட்டது. மூதறிஞர் வ.சுப.மா.வின் இத் ‘தமிழ்க் காதல்’, அம் 
 மாசுதனை அகற்றித் தூசு துடைத்துப் புத்தொளி பாய்ச்சி மீண்டும் அச்சங்க 
 கால மெய்ம்மையுணர்வோடு சொல்லித் தருகிறது.  
 ஓர் அக இலக்கிய மாணவன் இந்நூலைப் படிக்குமுன், தான் 
 கொண்டிருந்த பல்வேறு கருத்துக்கள், இதைப் படித்தபின் முற்றிலும் வேறுபட 
 மாறியதை அறிந்து வியப்பிலாழ்வான். இந்நூலுள் ஒவ்வொரு சொல்லும் தன் 
 பணியைச் செய்யுமாறு, அத்துணைச் செறிவோடும் வலுவோடும் பொலிவோடும் 
 இந்நூல் யாக்கப்பட்டுள்ளது. சுருங்கக் கூறின் சங்கப்பாடல் அனைய தூய 
 செவ்விய தரமுடையது இந்நூல். சங்கஇலக்கிய ஆய்வாளர்கள் இந்நூலை 
 மேற்கோள் காட்டுவதில் பேரார்வம் கொண்டிருந்ததை, இந்நூலுக்குப்  
 பின்வந்த ஆய்வுரைகள் அனைத்திலும் காணலாம். 
 புலப்பாட்டுத்திறன் என்பது, ஒரு கருத்தை எழுத்தில் வடித்துப்  
 படிப்பவர் மனத்தில் கொண்டுபோய்ச் செலுத்தும் திறம் பற்றியது. வெறும் 
 மொழிநடையை மட்டும் சார்ந்ததன்று அது. மொழி வழி, கருத்தைச் 
 செலுத்தவல்ல அனைத்துத் திறன்களும் பற்றியது அது. 
 மொழி ஆளுமையில் சங்கநூல்கள் இமயத்தின் உச்சத்தைத் 
 தொட்டுநின்றதை, இன்றும் முற்றவுணர்ந்தாரும் இலர்; கண்டு உரைத்தாருமிலர். 
 அக்கல்வியில், ‘அதூஉம் சாலும் நற்றமிழ் முழுதறிதல்’ எனும்  
 எல்லையை எட்டி இருந்தார் வ.சுப.மா. அதனால் இந்நூலை, ‘முந்துநூல்  
 கண்டு, முறைப்பட எண்ணிப் புலந்தொகுத்துப் போக்கறு பனுவலாகத் 
 தந்துள்ளார் அச் செம்மலார்.  
 தொல்காப்பியரின் ‘நோக்கு’க் கோட்பாட்டிற்கு, ‘மறித்து நோக்கி 
 இலக்கியப் பயன்கோடல்’ என உரை வகுத்தார், பேராசிரியர். அந்நெறியில் 
 எதிர் வினாக்களை எழுப்பி விடை காண முயலும் ஒரு தனிப்  
 போக்கிலமைந்த இந்நூல், ஒரு ‘துப்பறியும் புதினம்’ போல் விறுவிறுப்புடன் 
 மேன்மேலும் தொடர்ந்து படிக்கத் தூண்டுவதாயுளது. இதனைப் படிப்பார் தம் 
 விளங்காமை ஒழிந்து நன்கு விளங்கிக் கொள்ள வேண்டுமென்றே விரும்புவர். 
 எளிமை என்பது அருமையிலும் உளது என்பதற்கு மாணிக்க எழுத்துக்கள் 
 சான்றாக அமைகின்றன.  
	 |