முகப்பு
 
தொடக்கம்

அகத்திணை தோற்றம் பல்லாயிரமாண்டு தொன்மை உடையது. வாழையடி
வாழையாய் வந்த அக மரபுகளைப் பெற்றது. கீழ்மைக் குறிப்புகளைப்
புறக்கணித்தது.

     பழம்போலும் சங்கப் பனுவலைக் கற்றால்
     கிழம்போகும் கீழ்மையும் போம்

                                              மா.குறள்-461

<> அகத்திணையின் செவ்வியறிந்து அகத்திணை ஏழிற்கும் பொருள்
காணவேண்டும் என்றும், அகத்திணையின் அறம்காப்பார் வ.சுப.
ஒருதலைக்காமம், பொருந்தாக்காமம் என்றெல்லாம் வழங்கிய
பாழுங்கருத்துகளை மாற்றி, இவற்றுக்குரிய செம்பொருளையும், மெய்ப்
பொருளையும் கண்ட அகத்துறை ஞானிதான் வ.சுப! தமிழ்க்காதல் முழுதும்
அகத்திணைச் செவ்வி காக்கும் வேள்வியினை வ.சுப. நடத்தியுள்ளார்!
அகத்திணை பற்றிய தவறான புரிதல் கருத்துகளைத் கடிந்த பேராசான் வ.சுப.
என்பதை இந்நூலின் ஒவ்வொரு பக்கமும் பறைசாற்றுகிறது.

<> அகத்திணையின் செவ்வியறிந்து, தம் நுண்ணிய ஆய்வுக்
கருத்துகளால், சிலம்புகழி நோன்பு, மலரணியும் செயல், பொய் - வழு
தோன்றிய பிறகு, ஐயர் ‘(சான்றோர்) நடத்திய திருமணச்சடங்கு (கரணம்),
அகப்பாட்டில் சுட்டி ஒருவர் பெயர்சொல்லக் கூடாத கடும்விதி, - இன்னும்
இவை போன்று பலவற்றுக்குச் செவ்விய விளக்கம் தந்துள்ளார் வ.சுப;
அகம்பாடிய 378 கவிஞர்களின் சால்புகள், அகத்திணைக் கல்வியின்
முக்கியத்துவம் குறித்தெல்லாம் தெளிவுற மொழிந்துள்ளார். இது அகத்திணை
ஆய்வின் பேழை!

<> சங்க இலக்கியத்தின் காதற்கவிதைகளுக்கு இந்நூல் ஆய்வுத் திலகம்
வைத்துள்ளது. காதல் தமிழியத்துக்கு இந்நூல் நிகரற்ற ஒரு கொடை!
தமிழ்க்காதலால், அகத்திணை இலக்கியத்திற்குச் வ.சுப. புகழ் கூட்டுகிறார்.

<> மூதறிஞர் முனைவர் வ.சுப. மாணிக்கனாரின் ‘தமிழ்க்காதல்’ அக
இலக்கியங்களின் முல்லைசான்ற கற்பினைப் புலப்படுத்துகிறது. அகத்திணை
அறம்காக்கும் இந்தச் செவ்விய திறனாய்வு நூலை மெய்யப்பன் ஆய்வக
வெளியீடாகப் பதிப்பிப்பதில் இந்த ஆய்வகம் தனிப்பெருமை கொள்கிறது.
தமிழ்க்காதலின் உயர்வுள்ளுகிறது!

<> காதல் தமிழியத்தின் பரிசான இந்நூலைத் தமிழ்மக்கள் உயிரும்
உள்ளமும் தளிர்க்கப் பயிலட்டும்! செவ்விது! செவ்விது! தமிழ்க்காதல்.

இவ்வரிய ஆய்வுநூலுக்கு என் ஆசிரியப்பிரான் பேராசிரியர் இரா.
சாரங்கபாணி அவர்கள் ஆய்வுரை நல்கியுள்ளார்கள். இன்று மாணிக்கனார்
வழியில் தமிழ்வழிக் கல்விக்குத் தலைமை தாங்கும் பேராசிரியர் முனைவர்
தமிழண்ணல் அவர்களும் ஆய்வுரை நல்கியுள்ளார்கள். தமிழ்நலம் ஒன்றையே
கருதி வாழும் இப்பெருமக்கள் இருவருக்கும் எம் நெஞ்சம் நிறைந்த
நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

ஆய்வறிஞர்கள் போற்றும் இவ்வாய்வு நூலைத் தமிழ் ஆராய்ச்சி
உலகம் வரவேற்றுப் பயன்பெறும் என்பது என் நம்பிக்கை.


முன்பக்கம்
அடுத்த பக்கம்