முகப்பு
 
தொடக்கம்

<> அகத்திணை ஏழுவகைப்படும். கைக்கிளை, அன்பின் ஐந்திணை,
பெருந்திணை எனும் இவற்றுக்கு நால்வகை நிலப்பிரிவுகள் காரணங்கள்
இல்லை; முத்திறக் காமத்தன்மைகளும் காரணங்கள் இல்லை; காதல் மாந்தரின்
உரிப்பொருள் ஒழுக்கங்களே (பால் ஒழுக்கங்கள்) காரணங்கள் என்று
தெளிவுபடுத்துகிறது.

<> அகத்திணையின் உயிர்நாடி உள்ளப்புணர்ச்சி! களவு, கற்புநெறிகள்,
அன்பின்-ஐந்திணைக்குரியன; காதற்களங்களின் விரிவுகளைக் கொண்டது;
துறைவிரிவுகளை உடையது. ஐந்திணை; கைக்கிளை, பெருந்திணைகள்
துறைவிரிவுகள் அற்றவை என்று புலப்படுத்துவது.

<> ஐந்திணைக் காதல் அறம்சான்றது; உலகம் ஒப்புவது; மக்கட்கு
இயல்வது; இலக்கியத்துக்கு இசைந்தது. அன்பின் ஐந்திணையைப் போல,
கைக்கிளையும், பெருந்திணையும் விரித்துப்பாடும் இயல்பின அல்ல.

<>  சங்க இலக்கியம் முழுதும் தேடினாலும், கைக்கிளைக்குக்
கலித்தொகையில் மட்டும் 4 பாடல்கள் கிடைத்துள்ளன. இந்தக்
கலித்தொகையில்தான் பெருந்திணைக்கும் 10 பாடல்கள் கிடைத்துள்ளன.
இவற்றில் ஆண்பாற்கு 4; பெண்பாற்கு 6. இந்த அளவிற்குத் துறைச்
சின்மைகளைக் கொண்டவை இவை என்று தெளிவுறுத்துகிறது.

<> ‘ஓர் இனத்துக்குரிய பண்புதான், அந்த இனத்துக்கே உரிய
இலக்கியப் பண்பாகவும்
அமையும். காதற் கண்ணுடன் உலகியலை அணுகிய
ஓர் இனம் தமிழினம் மட்டுமே; எனவேதான் அது அகத்திணை
இலக்கியத்தைப் படைத்தது; உலகிற்களித்தது; என்று விளக்குவது. அகத்திணை
உலகக் கண் கொண்டது. இது கூறும் காதல் உலக மனித இனத்திற்கே
பொது; என்று பறை சாற்றுவது.

<> அன்பின் ஐந்திணை காதலின் இயல்பான வளர்கரு; கைக்கிளை
என்பது குறுங்கரு. சிறிய உறவு என்பது இதன் பொருள்; இது
“ஒருதலைக்காமம்” என்னும் இழிந்த பொருள் உடையது அன்று. கைக்கிளை
என்பது சொல் எதிர்பெறாமல் இளைஞன் எழுதும் ஒரு காதல் முன்னுரை.
காதலின் தொடக்கம். ஒரு சிறிய பொழுதுக்குக் காதலைச் சுட்டும் ஒருமன
நிலை.

<> ‘பெருந்திணை என்பது பொருந்தாக் காமம்; வலிந்த புணர்ச்சி;
இழிநிலை உடையது’, என்று இதுநாள் வரை கருதியும் எழுதியும் வந்தனர்.
இழிகாமம் பற்றியதாக இவை இருந்தால், இவற்றை ஒப்பற்ற அகத்திணை
கண்ட தமிழ்இனம் அகத்திணை ஏழிற்குள் அடக்கியிருக்காது என்று
மறுத்துத் தமிழ் அகத்திணை மரபில் - இது பற்றிய ஆய்வு மரபில்
புதியவிளக்கம் தருவது.

<> ‘பெருந்திணை என்பது பெருகிய காமம் உடையது; நாணம்
கடந்தது; கூனிக்கும்-குறளனுக்கும் குற்றேவலர்க்கும் உரிய இழிந்தது
என்றெல்லாம் எழுதிவந்த’ பாவத்தைப் போக்குகிறது இந்நூல்.

<> கைக்கிளை, பெருந்திணை குறித்து நெடிது நாள் தொடர்ந்த
கருத்துப் பிழைகளை வ.சுப. மறுத்து, முதன்முதல் புதுவிளக்கம்
தந்துள்ளார்.
ஐந்திணைக் காதலரின் ஆராக் காம உணர்வுதான்
பெருந்திணை என்பர்.


முன்பக்கம்
அடுத்த பக்கம்